போதைப்பொருட்கள் தடுப்பு குறித்துமாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்கலெக்டர் சரயு அறிவுரை

Update: 2023-08-11 19:45 GMT

குருபரப்பள்ளி

போதைப்பொருட்கள் தடுப்பு குறித்து மாணவ, மாணவிகளிடம் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று கலெக்டர் சரயு கூறினார்.

உறுதிமொழி ஏற்பு

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள கூட்டரங்கில், போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் சரயு, போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர், மதியழகன் எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமை தாங்கினர். நிகழ்ச்சியில் போதை பழக்கத்திற்கு எதிராக உறுதிமொழி ஏற்கப்பட்டது.

நிகழ்ச்சியில் கலெக்டர் பேசியதாவது:-

தமிழக அரசு போதைப்பொருட்களின் பயன்பாட்டை முற்றிலுமாக ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, போதைப் பொருட்களின் பயன்பாட்டை ஒழிக்க பள்ளி மற்றும் கல்லூரிகளில் இளைய சமுதாயத்தினரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி எடுக்கப்பட்டது.

விழிப்புணர்வு

போதை பாதை அழிவு பாதை என்பதை நாடும், நாட்டு மக்களும் அறிவார்கள். தற்செயலாகவோ, தவறுதலாகவோ அதனை பயன்படுத்துபவர்கள் அதற்கு முழுமையாக அடிமையாகி, மொத்தமாக அதனுள் மூழ்கிவிடுகிறார்கள். போதைப்பொருட்களை முற்றிலும் அழிக்க வேண்டும். அதன் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதற்கு அரசு சட்ட வழியிலான அனைத்து முறைகளையும் பின்பற்றி வருகிறது. இளைய சமுதாயத்தினரிடம் போதைப்பொருள் பயன்பாட்டின் ஆபத்து குறித்தும், போதைப்பொருட்கள் தடுப்பு குறித்து மாணவ, மாணவிகளிடம் போதிய விழிப்புணர்வை பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து போதை தடுப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் மாணவ மாணவிகளுக்கு வழங்கப்பட்டன. இதில் மருத்துவகல்லூரி மனநல மருத்துவர் மற்றும் பள்ளி மாணவர்கள் போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து பேசினர்.

முன்னதாக, கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி தலைமையில், அலுவலர்கள் போதைப்பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்.

இந்த நிகழ்ச்சிகளில், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வேடியப்பன், உதவி ஆணையர் (ஆயம்) சுகுமார், கிருஷ்ணகிரி உதவி கலெக்டர் பாபு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் பூவதி, துணை முதல்வர் சாத்விகா, துணை போலீஸ் சூப்பிரண்டு தமிழரசி, நகராட்சி துணை தலைவர் சாவித்திரி கடலரசு மூர்த்தி மற்றும் அதிகாரிகள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்