ரூ.25 கோடியில் புதிய கடற்கரை சாலை

ராமேசுவரம் அக்னி தீர்த்த கடற்கரையில் இருந்து ரூ.25 கோடியில் புதிய கடற்கரை சாலை அமைக்கப்பட உள்ளதாக காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. கூறினார்.

Update: 2023-03-18 18:45 GMT

ராமேசுவரம், 

ராமேசுவரம் அக்னி தீர்த்த கடற்கரையில் இருந்து ரூ.25 கோடியில் புதிய கடற்கரை சாலை அமைக்கப்பட உள்ளதாக காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. கூறினார்.

ஆய்வு

ராமேசுவரம் அக்னி தீர்த்த கடற்கரை பகுதியில் இருந்து புதிதாக கடற்கரை சாலை அமைய உள்ள பகுதியை நேற்று ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்சா முத்துராமலிங்கம், நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் சரவணன், நகராட்சி மண்டல பொறியாளர் மனோகரன், நகர சபை சேர்மன் நாசர்கான் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ஆய்வின் போது நகர சபை ஆணையாளர் கண்ணன், பொறியாளர் அய்யனார், நகர சபை மேற்பார்வையாளர் ஜெகதீசன், கவுன்சிலர்கள் சத்தியமூர்த்தி, முகேஷ்குமார், சங்கர், முருகன், பிரபுகுமார், முன்னாள் நகர சபை தலைவர் அர்ஜுனன், நகரசபை துணை தலைவர் பிச்சை தட்சிணாமூர்த்திதி.மு.க. சுற்றுச்சூழல் அணி மாவட்ட துணை அமைப்பாளர் சங்கர், கட்சி நிர்வாகிகள் நாகராஜ், பாஸ்கரன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

ஆய்வுக்கு பின்னர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. கூறியதாவது, மக்களின் 10 ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் ராமேசுவரம் அக்னி தீர்த்த கடற்கரை பகுதியில் இருந்து பி.எஸ்.என்.எல். அலுவலகம் வரை தேசிய நெடுஞ்சாலைத்துறையோடு இணைக்கும் வகையில் ரூ.25 கோடியில் புதிதாக கடற்கரை சாலை அமைக்கப்படவுள்ளது. இன்னும் ஒரு மாதத்தில் பணிகள் தொடங்கப்பட்டு 6 மாதத்திற்குள் முழுமையாக முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

நடைபாதை

அக்னி தீர்த்த கடற்கரை பகுதியில் இருந்து சுமார் 1400 மீட்டர் நீளத்திலும், 16 மீட்டர் அகலத்திலும் கடலை ஒட்டி இந்த சாலை அமைக்கப்பட உள்ளது. மேலும், சுற்றுலா பயணிகள் நடந்து செல்லும் வகையில் நடைபாதையும் அமைக்கப்பட உள்ளது. இப்பணி முடிவடையும் பட்சத்தில் ராமேசுவரம் நகரில் போக்குவரத்து நெருக்கடி முழுமையாக குறைவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.

மேலும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் ராமேசுவரத்தில் 3 இடங்களில் சுற்றுச்சாலை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. ரூ.64 கோடியில் நெடுஞ்சாலை துறை மூலம் இந்த திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு வருகின்றது. அதேபோல் ராமேசுவரம் கச்சகுளம் ஊருணி ரூ.45 லட்சத்தில் தூர்வாரும் பணி, ரூ.35 லட்சத்தில் தில்லை நகர் பகுதியில் பூங்கா, ராமேசுவரம் சல்லிமலை பகுதியில் புதிதாக அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டவும் அடிக்கல் நாட்டப்பட்டது என்று கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்