உழவர்களின் நலனை பேணிக்காத்திட உறுதியேற்போம் - டிடிவி தினகரன் பொங்கல் வாழ்த்து
தமிழர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.;
சென்னை,
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பல்வேறு அரசியல் தலைவர்கள் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தமிழக மக்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;
“பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழும் உலகத் தமிழர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை.
உலகம் பல தொழில்களைச் செய்து சுழன்றாலும், உழவுத் தொழிலே சிறந்தது என்ற வள்ளுவரின் வாக்கிற்கு ஏற்ப, உலகத் தொழில் அனைத்திற்கும் அச்சாணியாகத் திகழும் உழவுத் தொழிலையும், அதில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் உழவர் பெருமக்களின் நலனையும் பேணிக்காத்திட நாம் அனைவரும் இந்நாளில் உறுதியேற்போம்.
அனைவருக்கும் மகிழ்ச்சியைத் தரும் அறுவடைத் திருநாளாம் பொங்கல் திருநாளில் உலகெங்கும் வாழும் தமிழர்களின் வாழ்விலும் வளமும், நலமும், பெருகி அமைதியும், இன்பமும் நிலைக்கட்டும் என மனதார வாழ்த்தி மீண்டும் ஒருமுறை எனது பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.