பொங்கலையொட்டி, சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் மக்கள்... தாம்பரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல்
பல்லாவரத்தில் இருந்து தாம்பரம் செல்லும் ஜிஎஸ்டி சாலையில் அதிகளவிலான வாகனங்கள் அணிவகுத்து செல்கின்றன.;
சென்னை,
நாளை போகிப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நாளை மறுதினம் கொண்டாடப்பட உள்ளது. அதன் பின்னர் மாட்டுப்பொங்கல், உழவர் திருநாள், வார விடுமுறை என அடுத்தடுத்து 5 தினங்கள் விடுமுறை வருகிறது.
தொடர் விடுமுறை மற்றும் பொங்கல் பண்டிகையை தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டாட மக்கள் விருப்பப்படுவர். எனவே சென்னையில் தங்கி வேலை பார்க்கும் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்வதற்காக பேருந்துகள், ரெயில்கள் மூலமும் சென்னை நகரை விட்டு புறப்பட்டு கொண்டு இருக்கின்றனர்.
இதன் காரணமாக முக்கிய வழித்தடங்களில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாக செல்கின்றன. குறிப்பாக, கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் மற்றும் கோயம்பேடு பேருந்து நிலையங்களில் அதிக அளவில் மக்கள் கூடியுள்ளனர். தங்களது சொந்த ஊர்களான குறிப்பாக தென் மாவட்டங்களுக்கு மக்கள் படையெடுத்து வருகின்றனர்.
இதன் காரணமாக பல்லாவரத்தில் இருந்து தாம்பரம் செல்லும் ஜிஎஸ்டி சாலையில் அதிகளவிலான வாகனங்கள் அணிவகுத்து செல்கின்றன. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனை சமாளிக்க போக்குவரத்துக்கு போலீசார் தரப்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில் போக்குவரத்து நெரிசல் காரணமாக சிங்கபெருமாள் கோவில் சாலையில் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து செல்கின்றன. மேலும் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் மிக நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருக்கின்றன. மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.