ஈரோடு தாலுகா அலுவலகம் முன்பு உரிமைத்தொகை கிடைக்காததால் பெண்கள் சாலை மறியல்

ஈரோடு தாலுகா அலுவலகம் முன்பு உரிமைத்தொகை கிடைக்காததால் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

Update: 2023-09-19 22:06 GMT

மகளிர் உரிமைத்தொகை கிடைக்காததால் ஈரோடு தாலுகா அலுவலகம் முன்பு பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சாலை மறியல்

தமிழ்நாடு அரசு சார்பில் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை கடந்த 15-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்துக்கு விண்ணப்பித்தும் உரிமைத்தொகை கிடைக்காத பெண்கள், தங்களுடைய விண்ணப்பத்தின் நிலை குறித்து மேல்முறையீடு செய்வதற்கும் அவகாசம் வழங்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

இந்தநிலையில் ஈரோடு கிருஷ்ணம்பாளையம், திருநகர் காலனி, மாணிக்கம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மகளிர் உரிமைத்தொகை கிடைக்காத பெண்கள் சிலர் ஈரோடு தாலுகா அலுவலகத்துக்கு நேற்று காலை வந்தனர். அவர்கள் தாலுகா அலுவலகம் முன்பு செல்லும் திருமகன் ஈவெரா சாலையில் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், தங்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

பேச்சுவார்த்தை

இதுகுறித்த தகவல் கிடைத்ததும் ஈரோடு டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத்தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு தாலுகா அலுவலகத்துக்கு சென்றனர். அங்கு அவர்களிடம் தாசில்தார் ஜெயக்குமார் பேச்சுவார்த்தை நடத்தியபோது கூறுகையில், "தகுதி உள்ள அனைத்து பெண்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும். முதல்-அமைச்சர் தொடங்கி வைத்த உடன் பெண்களின் வங்கி கணக்குகளில் ரூ.1,000 செலுத்தப்பட்டது. மீதமுள்ள 5 லட்சம் மனுக்கள் பரிசீலனையில் உள்ளன. மேலும் விண்ணப்பித்தும் உரிமைத்தொகை கிடைக்காத பெண்கள் மேல்முறையீடு செய்யலாம் என்றும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்காக ஈரோடு தாலுகா அலுவலகத்தில் 3 உதவியாளர்கள் கொண்ட உதவி மையம் செயல்பட்டு வருகிறது. எனவே மேல்முறையீடு செய்யும் பெண்களுக்கு 23-ந் தேதி வங்கி கணக்குகளில் பணம் செலுத்தப்படும்", என்றார்.

பெண்களின் திடீர் சாலை மறியல் போராட்டம் காரணமாக திருமகன் ஈவெரா சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்