பவானிசாகர் அணை நீர்வரத்து 1,058 கன அடியாக அதிகரிப்பு

இன்றைய நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 82.64 அடியாக உள்ளது.

Update: 2022-06-15 03:08 GMT

ஈரோடு,

ஈரோடு மாவட்டத்தில் முக்கிய அணையாக விளங்குவது பவானிசாகர் அணை. இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடியாகும். அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரால் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களை சேர்ந்த சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இதுதவிர ஈரோடு மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குவது பவானிசாகர் அணையாகும்.

பவானிசாகர் அணைக்கு நீலகிரி மாவட்டத்தில் இருந்து வரும் பவானி ஆறும், கூடலூர் மலைப்பகுதியில் இருந்து வரும் மோயாரும் நீர்வரத்து ஆதாரமாக விளங்குகிறது. தற்போது நீலகிரி மலைப் பகுதியில் பரவலாக மழை பெய்துள்ளது. இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து சற்று அதிகரித்துள்ளது.

இன்றைய நிலவரப்படி பவானிசாகர் அணைக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 1,058 கன அடியாக உள்ளது. பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 82.64 அடியாக உள்ள நிலையில், தற்போது அணையில் 17.1 டி.எம்.சி. அளவு நீர் இருப்பு உள்ளது. அதே சமயம் அணையில் இருந்து குடிநீர் மற்றும் பாசன தேவைகளுக்காக 1,055 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்