நீர்வரத்து அதிகரிப்பு; பவானிசாகர் அணை நீர்மட்டம் 105 அடியை நெருங்குகிறது

நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பவானிசாகர் அணை நீர்மட்டம் 105 அடியை நெருங்குகிறது.

Update: 2022-12-20 22:14 GMT

பவானிசாகர்

நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பவானிசாகர் அணை நீர்மட்டம் 105 அடியை நெருங்குகிறது.

பவானிசாகர் அணை

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து மேற்கே 16 கி.மீ. தூரத்திலும் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து வடகிழக்கில் 36 கி.மீ தூரத்திலும் பவானி ஆறு, மோயாறு கலக்கும் இடத்தில் அமைந்துள்ளது பவானிசாகர் அணை. தென்னிந்தியாவின் மிகப்பெரிய மண் அணை மற்றும் தமிழ்நாட்டில் 2-வது பெரிய அணை என்ற பெருமையும் கொண்டது பவானிசாகர் அணை. இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடி என கணக்கிடப்படுகிறது.

பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் வழியாக 5 மதகுகள் மூலம் திறக்கப்படும் தண்ணீரின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இதேபோல் பவானி ஆற்றில் 9 மதகுகள் மூலம் திறக்கப்படும் தண்ணீரின் மூலம் தடப்பள்ளி, அரக்கன்கோட்டை மற்றும் காலிங்கராயன் பாசன வாய்க்கால்கள் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இதுதவிர ஈரோடு மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குவது பவானிசாகர் அணை என்பது குறிப்பிடத்தக்கது.

நீர் வரத்து அதிகரிப்பு

இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை 4 மணி நிலவரப்படி பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 1,241 கன அடி தண்ணீர் வந்தது. அணையின் நீர்மட்டம் 104.72 அடியாக இருந்தது. அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 500 கன அடி தண்ணீரும், பவானி ஆற்றில் உபரி நீராக வினாடிக்கு 200 கன அடி தண்ணீரும், பாசனத்துக்காக வினாடிக்கு 500 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது.

நேற்று மாலை 4 மணி நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 104.83 அடியாக உயர்ந்தது. அணைக்கு வினாடிக்கு 3 ஆயிரத்து 622 கன அடி தண்ணீர் வந்தது. அணையின் பாதுகாப்பு கருதி நீர்மட்டம் முழு கொள்ளளவான 105 அடியை எட்ட விடாமல் பவானி ஆற்றில் உபரி நீராக வினாடிக்கு 1,500 கன அடி தண்ணீரும், பாசனத்துக்காக வினாடிக்கு 500 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது. கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.

தொடர்ந்து 4-வது முறை

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 4-வது முறையாக முழு கொள்ளளவான 105 அடியை நெருங்குகிறது. 2019-ம் ஆண்டு நவம்பர் 9-ந் தேதி அணையின் நீர்மட்டம் 105 அடியையும், 2020-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி 105 அடியையும், 2021-ம் ஆண்டு டிசம்பர் 11-ந் தேதி அணையின் நீர்மட்டம் 104.85 அடியையும் எட்டியது குறிப்பிடத்தக்கது. அதன்பின்னர் இந்த ஆண்டில் முதல் முறையாக நேற்று மாலை 4 மணி நிலவரப்படி அணை நீர்மட்டம் 104.83 அடியை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவான 105 அடியை நெருங்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் பவானி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் பவானிசாகர் பொதுப்பணித்துறை சார்பாக பவானிசாகர் அணையில் இருந்து பவானி கூடுதுறை வரை செல்லும் பவானி ஆற்றின் கரையோர மக்களுக்கு தொடர்ந்து வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கரையோர பகுதியில் இருக்கக்கூடிய பொதுமக்கள் பாதுகாப்பான இடத்துக்கு செல்லுமாறு பொதுப்பணித்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்