லாரிகள் மோதிய விபத்தில் பீகார் வாலிபர் பலி
வேலூரில் லாரிகள் மோதிய விபத்தில் பீகார் வாலிபர் பலியானார்.;
சென்னையில் இருந்து கம்ப்யூட்டர் உதிரிபாகங்கள் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்தது. லாரியை பீகாரை சேர்ந்த வாலிபர் ஓட்டினார். அதில் பீகார் மாநிலம் கான்பூரை சேர்ந்த மோதிலால்குமார் (வயது 35) கிளீனராக இருந்தார். அதிகாலை 3 மணியளவில் வேலூர் சேண்பாக்கம் ரெயில்வே மேம்பாலத்தில் லாரி சென்றது. அப்போது எதிர்பாராத விதமாக முன்னால் சென்று கொண்டிருந்த கன்டெய்னர் லாரியின் பின்னால் லாரி மோதியது.
இந்த விபத்தில் கிளீனர் மோதிலால்குமார் உடல் நசுங்கி சம்பவ இடத்தில் பலியானார். லாரி டிரைவர் உடனடியாக இறங்கி அங்கிருந்து ஓடிவிட்டார். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவலறிந்த வேலூர் வடக்கு போலீசார் அங்கு சென்று மோதிலால்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்துக்குள்ளான வாகனங்களை உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்து, லாரியை வடக்கு போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.