ஒரு மனிதனை சிறந்தவனாக உருவாக்குவது புத்தகங்களே

ஒருமனிதனை சிறந்தவனாக உருவாக்குவது புத்தகங்களே என கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற புத்தக கண்காட்சியில் செய்தி-மக்கள் தொடர்புத்துறை இயக்குனர் ஜெயசீலன் பேசினார்

Update: 2022-12-26 18:45 GMT

கள்ளக்குறிச்சி

புத்தக கண்காட்சி

கள்ளக்குறிச்சியில் உள்ள சென்னை பைபாஸ் திடலில் புத்தகத் திருவிழா என்ற பெயரில் புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது. 11-வது நாள் நடைபெற்ற விழாவுக்கு மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கினார். தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் சுந்தர்ராஜன் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக செய்தி, மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் ஜெயசீலன் கலந்துகொண்டு புத்தக அரங்குகளை பார்வையிட்டு பேசியதாவது:-

உயரங்களை எட்டுவதற்கு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வரலாற்று சிறப்புகளை நான் தேடிதேடி பார்வையிட்டுள்ளேன். திருக்கோவிலூரில் உள்ள கபிலர் குன்றின் கல்வெட்டுகளை பார்வையிட்டுள்ளேன். ஈராயிரம் ஆண்டு இலக்கிய வரலாற்றில் தமிழ் சமூக பண்பாட்டு, வரலாற்றில் பல்வேறு எழுத்தாளர்களால் எழுத்தப்பட்டுள்ள ஊர் நமது கள்ளக்குறிச்சி மாவட்டம்.

ஒரு புத்தகத்தின் ஒரு வரி, ஒரு மனிதனிடம் ஊன்று கோலாக நின்று உலகில் பல உயரங்களை அவன் எட்டுவதற்கு உதவுகிறது. ஒரு மனிதனை சிறந்தவனாக உருவாக்குவது புத்தகங்களே.

சாதாரண செயல் அல்ல

பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டதே இப்புத்தக திருவிழாவின் வெற்றியாகும். பள்ளி குழந்தைகள் புத்தகங்களை காணும் போது அதை வாங்கி படிக்க வேண்டும் என்ற உந்துதலே ஒரு மாணவனை தவறான பாதைக்கு செல்வதிலிருந்து தடுக்கும். இதுவே பெரிய வெற்றியாகும்.

ஒரு புத்தகத்தை உருவாக்குவது என்பது ஒரு சாதாரண செயல் அல்ல. வீட்டைக் கட்டிப்பார், கல்யாணம் பண்ணிப்பார் என்பதுடன் புத்தகத்தை எழுதிப்பார் என்றும் சொல்ல வேண்டும்.

புத்தகங்களே உருவாக்கும்

ஜி.யு.போப் என்பவர் திருக்குறள், திருவாசகம் உள்ளிட்ட பல்வேறு புத்தகங்களை பல்வேறு மொழிகளில் மொழி பெயர்த்துள்ளார். அதேபோல் பிற மாநிலத்தை சேர்ந்த கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் விரைவில் தமிழில் புத்தகம் எழுதும் அளவுக்கு தமிழ் மொழியை கற்பார் என நான் நம்புகிறேன்.

தமிழ் சமூகத்தின் மனித வளத்தை சிறப்பாக உருவாக்கும் ஒரு முக்கிய புள்ளியாக இப்புத்தகக் கண்காட்சி அமையும். எனவே இதுபோன்ற புத்தகக் கண்காட்சியை அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் கோட்டாட்சியர்கள் பவித்ரா, யோகஜோதி மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்