ஆமை வேகத்தில் பாலம் கட்டும் பணி

குறிஞ்சிப்பாடியில் ஆமை வேகத்தில் பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியை விரைந்து முடிக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;

Update:2023-08-03 00:56 IST

குறிஞ்சிப்பாடி, 

ரூ.18 கோடியில் மேம்பாலம்

கடலூர்-சின்னசேலம் கூட்டுரோடு வரை தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்துகள் நடைபெற்று வருகிறது. இதனால் சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதன்பேரில் தற்போது சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது.

இதில் குறிஞ்சிப்பாடி ரெயில் நிலையம் அருகே உள்ள புறவழிச்சாலை நான்கு முனை சந்திப்பில் கடலூர்-விருத்தாசலம் சாலையில் ரூ.18 கோடியில் மேம்பாலம் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டு கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு பணிகள் தொடங்கப்பட்டது.

வாகன ஓட்டிகள் அவதி

ஆனால் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். பணிகள் தொடங்கி 1½ ஆண்டுகள் ஆகியும் இன்னும் 50 சதவீத பணிகள் கூட முடியவில்லை. மேலும் பள்ளம் தோண்டப்பட்ட பகுதிகளில் தடுப்பு வேலி அமைக்கப்படவில்லை. எச்சரிக்கை பலகையும் வைக்கப்படவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகின்றனர்.

மேலும் பாலத்தின் இருபுறமும் சர்வீஸ் சாலை பணிக்காக சாலை ஓர ஆக்கிரமிப்பு முறையாக அகற்றப்படாமல் உள்ளது. இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே ஆக்கிரமிப்புகளை முறையாக அகற்ற வேண்டும் எனவும், பாலம் கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் எனவும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்