பழுப்பு கீச்சான், சின்ன சீழ்க்கை சிறகி வருகை: கரிசல்குளம் கண்மாயில் வெளிநாட்டு பறவைகள்- பறவை ஆர்வலர்கள் வியப்பு
மதுரை நகரையொட்டி கரிசல் குளம் கண்மாய் பகுதியில் பழுப்பு கீச்சான் மற்றும் சின்ன சீழ்க்கை சிறகி போன்ற வெளிநாட்டு பறவைகள் காணப்பட்டதாக பறவை பார்த்தல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.;
மதுரை நகரையொட்டி கரிசல் குளம் கண்மாய் பகுதியில் பழுப்பு கீச்சான் மற்றும் சின்ன சீழ்க்கை சிறகி போன்ற வெளிநாட்டு பறவைகள் காணப்பட்டதாக பறவை பார்த்தல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
பறவை பார்த்தல்
பறவைகள் குறித்த ஆய்வில் தன் வாழ்நாளில் பெரும்பாலான நாட்களைக் கழித்தவர் இந்தியாவின் பறவை மனிதன் என்று அழைக்கப்பட்ட மறைந்த சலீம் அலி. இவரது 126-வது பிறந்த நாளை முன்னிட்டு பறவை பார்த்தல் ஆர்வலர்கள் பறவை காணல் நிகழ்வு ஏற்பாடு செய்திருந்தனர்.
பூவுலகின் நண்பர்கள் குழுவுடன் அமெரிக்கன் கல்லூரி விலங்கியல் துறை பேராசிரியர் ராஜேஷ் தலைமையில் விலங்கியல் துறை மாணவர்கள் மற்றும் வன உயிரின ஆராய்ச்சி மாணவர் கிஷோர், இயற்கை ஆர்வலர் ஐசக் குழுவினர் இணைந்து மதுரை கூடல் நகரில் உள்ள கரிசல்குளம் கண்மாயில் பறவைகள் கணக்கெடுப்பு நடத்தினர்.
வெளிநாட்டு பறவை
இந்த கணக்கெடுப்பில் கரிசல்குளம் கண்மாயில் வெள்ளை நாமக்கோழி, பாம்புத்தாரா, கானாங்கோழி, செங்கால் நாரை, சுடலை குயில், மடையான், பழுப்பு கொக்கு, தகைவிலான், முக்குளிப்பான், புள்ளிபுறா, நெடுங்கால் உள்ளான், கதிர்க்குருவி, நீலசிறகி, புள்ளி மூக்கு வாத்து உட்பட 25க்கும் மேற்பட்ட பறவைகளை கண்டனர். அதில் வெளிநாட்டு பறவைகளாகிய பழுப்பு கீச்சான் மற்றும் சின்ன சீழ்க்கை சிறகி அடங்கும்.
குப்பை ஆபத்து
இது குறித்து குழுவினர் கூறும் போது, மனிதர்கள் இல்லாத உலகில் பறவைகளால் வாழ முடியும். ஆனால், பறவைகள் இல்லாத உலகில் மனிதர்களால் வாழ முடியாது" என்பார் இந்தியாவின் பறவைகள் மனிதர் என்றழைக்கப்படும் சலீம் அலி. சுற்றுச்சூழல் இணைப்பு சங்கிலியில் பறவைகள் பங்கு முக்கியமானது.பறவைகள் காப்பாற்றப்பட நீராதாரங்களை பராமரிப்பது அவசியம். கரிசல்குளம் கண்மாயில் தொடர்ந்து குப்பைகளை கொட்டுவதால் இந்த கண்மாய் முற்றிலும் மாசுபடும். இதனால், இங்கு பறவைகள் வருகை தடைபடும்.குறிப்பாக, இந்த கண்மாயில் பழுப்பு கீச்சான் மற்றும் சின்ன சீழ்க்கை சிறகி என்ற வெளிநாட்டு பறவைகள் வந்ததை பார்க்க முடிந்தது. இது போல் உள்ளூர் மற்றும் வெளியூர் பறவைகள் காப்பாற்றப்பட கரிசல் குளம் கண்மாய் தூய்மையாக இருக்க வேண்டும். இதற்கு மாநகராட்சி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.