கேரளா:13 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் - தமிழக வாலிபர் கைது
பாலாஜி தனது சொந்த ஊரான தஞ்சாவூரில் பதுங்கியிருப்பது கேரள போலீசாருக்கு தெரிய வந்தது.;
திருவனந்தபுரம்,
தஞ்சாவூர் அய்யம் பேட்டை - கட்டிமேடு காலனி பகுதியை சேர்ந்த வாலிபர் பாலாஜி (வயது 26). இவர் கடந்த சில மாதங்களுக்கு கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள தனது உறவினரின் வீட்டிற்கு வந்திருந்தார். அதிலிருந்து அங்கேயே தங்கியிருந்தார். அப்போது அவருக்கு அந்த பகுதியை சேர்ந்த 13 வயது மதிக்கத்தக்க சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த சிறுமியை வாலிபர் பாலாஜி, தனியாக அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து சிறுமி தரப்பில் கோயிலாண்டி போலீசில் புகார் செய்யப்பட்டது.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து வாலிபர் பாலாஜியை கைது செய்ய நடவடிக்கை எடுத்தனர். அவர் இதனையறிந்த தலைமறைவானார். செல்போன் பயன்படுத்தாமல் இருந்ததால் அவரது இருப்பிடத்தை போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. அவரை கடந்த 2 மாதங்களாக போலீசார் தேடி வந்தனர்.
இந்த நிலையில் பாலாஜி தனது சொந்த ஊரான தஞ்சாவூரில் பதுங்கியிருப்பது கேரள போலீசாருக்கு தெரிய வந்தது. இதையடுத்து கோயிலாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமித்குமார், உதவி சப்-இன்ஸ்பெக்டர் சுனில்குமார் உள்ளிட்டோர் அடங்கிய தனிப்படை போலீசார், தஞ்சாவூருக்கு சென்றனர்.
அவர்கள் தனது வீட்டில் பதுங்கியிருந்த பாலாஜியை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். பின்பு அவரை கோழிக்கோட்டுக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பாலாஜி மீது தஞ்சாவூரில் கொலை முயற்சி, திருட்டு உள்ளிட்ட பல குற்ற வழக்குகள் உள்ளன. அதிலிருந்து தப்புவதற்காக கேரளாவில் இருந்தபோது சிறுமியிடம் பழகி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.