தொழில் அதிபர் தூக்குப்போட்டு தற்கொலை
தொழில் அதிபர் தூக்குப்போட்டு தற்கொலை;
கோவை
கோவையில் கடன் தொல்லை காரணமாக தொழில் அதிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
தொழில் அதிபர்
கோவை பீளமேடு அருகே உள்ள நேரு நகரை சேர்ந்தவர் ராஜன் (வயது 54). தொழில் அதிபரான இவர் கிரைண்டர்களுக்கு உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வந்தார். இவருக்கு திருமணமாகி கோகிலா என்ற மனைவியும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.
கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ராஜனும், கோகிலாவும் பிரிந்தனர். அத்துடன் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து 2 பேரும் கடந்த 2009-ம் ஆண்டில் விவாகரத்தும் பெற்றனர். மனைவி பிரிந்து சென்றதால் ராஜன் மிகவும் சோகம் அடைந்தார். அத்துடன் அவருக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
தற்கொலை
இதற்காக அவர் பலரிடம் கடன் வாங்கினார். தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக அந்த கடனை திரும்ப செலுத்த முடியவில்லை. இதனால் கடன் கொடுத்தவர்கள் ராஜன் வீட்டிற்கு வந்து கேட்க தொடங்கினார்கள். சிலர் வீட்டிற்கு வந்து அவரை திட்டிச்சென்றதாகவும் கூறப்படுகிறது.
இதன் காரணமாக வாழ்க்கையில் வெறுப்படைந்த ராஜன், தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த பீளமேடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, ராஜனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-