சிதம்பரம் அருகே கோவில் தர்மகர்த்தா வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு முன்விரோதம் காரணமா? போலீசார் விசாரணை

சிதம்பரம் அருகே கோவில் தர்மகர்த்தா வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. முன்விரோதம் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-09-29 18:45 GMT

பரங்கிப்பேட்டை, 

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள பி.முட்லூர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் சீனு என்கிற ராமதாஸ்(வயது 55). இவர் பரங்கிப்பேட்டை மெயின் ரோட்டில் உள்ள புற்று மாரியம்மன் கோவில் தர்மகர்த்தாவாக உள்ளார். மேலும் அவர் பி.முட்லூரில் 120 அடி உயரத்தில் ஆஞ்சநேயர் கோவிலை கட்டி வருகிறார். நேற்று முன்தினம் இரவு ராமதாஸ் தனது வீட்டின் அருகே ஜீப்பை நிறுத்திவிட்டு தூங்க சென்றார்.

இந்த நிலையில் நேற்று அதிகாலையில் அங்கு வந்த மர்மநபர்கள் சிலர் திடீரென ராமதாஸ் வீட்டின் மீது 2 பெட்ரோல் குண்டுகளை அடுத்தடுத்து வீசினர். இதில் ஒரு குண்டு ஜீப்பின் மீதும், மற்றொரு குண்டு வீட்டு வாசப்படியிலும் விழுந்து பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. இதில் ஜீப் தீப்பற்றி எரிய தொடங்கியது.

ஜீப்பில் பற்றி எரிந்த தீ

இந்த சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்த ராமதாஸ் வெளியே வந்து பார்த்தார். அப்போது ஜீப் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். பின்னர் ஜீப்பில் பற்றி எரிந்த தீயை தண்ணீரை ஊற்றி அணைத்தார். இதில் ஜீப் லேசான சேதமடைந்தது. இதற்கிடையே அக்கம்பக்கத்தினர் அங்கு திரண்டு வந்ததால் அந்த பகுதி பரபரப்புடன் காணப்படுகிறது.

பின்னர் இதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ்ராஜ், பரங்கிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் குணபாலன், சப்-இன்ஸ்பெக்டர் சிவராமன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

போலீஸ் சூப்பிரண்டு விசாரணை

இதற்கிடையே இந்த சம்பவம் பற்றி அறிந்த கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் அங்கு சென்று, நடந்த சம்பவம் பற்றி விசாரித்தார். மேலும் கடலூரில் இருந்து மோப்பநாய் கூப்பர் வரவழைக்கப்பட்டது. அது வீட்டை மோப்பம்பிடித்தபடி சிறிது தூரம் ஓடிச்சென்று நின்றது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.

இதுகுறித்த புகாரின்பேரில் பரங்கிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமதாஸ் வீட்டில் பெட்ரோல் வெடிகுண்டு வீசிய மர்மநபர்கள் யார்?, முன்விரோதம் காரணமாக அவருடைய வீட்டில் பெட்ரோல் வெடிகுண்டு வீசப்பட்டதா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகாலையில் கோவில் தர்மகர்த்தா வீட்டில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட சம்பவம் பரங்கிப்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்