விஷம் குடித்து விட்டு மனு கொடுக்க வந்த வாலிபரால் பரபரப்பு

இருசக்கர வாகனத்தை நிதிநிறுவனத்தினர் பறித்ததால் விரக்தி அடைந்த வாலிபர் விஷம் குடித்து விட்டு திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-03-03 19:30 GMT

இருசக்கர வாகனத்தை நிதிநிறுவனத்தினர் பறித்ததால் விரக்தி அடைந்த வாலிபர் விஷம் குடித்து விட்டு திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மனு கொடுக்க வந்த வாலிபர்

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று மாலை சுமார் 5 மணி அளவில், வாலிபர் ஒருவர் வந்தார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம், கலெக்டரிடம் மனு கொடுக்க வேண்டும் என்று அவர் கூறினார். இதையடுத்து போலீசார் அவரிடம் விசாரித்தனர். விசாரணையில் அந்த வாலிபர், ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள கே.புதுக்கோட்டையை சேர்ந்த சிவசக்தி (வயது 28) என்பது தெரியவந்தது.

மேலும் அவர், தனியார் நிதிநிறுவனத்தில் கடன் பெற்று இருசக்கர வாகனம் வாங்கி உள்ளார். அந்த கடன் தவணையை செலுத்த தாமதம் ஆனதால், நிதிநிறுவனத்தினர் இருசக்கர வாகனத்தை பறித்து கொண்டு சென்று விட்டனர். அந்த வாகனத்தை மீட்டு தரும்படி மனு கொடுக்க வந்ததாக போலீசாரிடம் சிவசக்தி தெரிவித்தார். அப்போது சிவசக்தி மிகவும் சோர்வாக காணப்பட்டார்.

விஷம் குடித்தார்

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், அவரிடம் துருவிதுருவி விசாரித்தனர். அதில் விஷம் குடித்து விட்டு மனு கொடுக்க வந்ததாக அவர் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து போலீசார் அவரை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்துக்கு விஷம் குடித்து விட்டு மனு கொடுக்க வந்த வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தாடிக்கொம்பு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்