குட்கா வழக்கில் முடக்கப்பட்ட சொத்துகளை விடுவிக்க முடியாது: சென்னை சி.பி.ஐ. கோர்ட்டு உத்தரவு
முன்னாள் அமைச்சர்கள் டாக்டர் விஜயபாஸ்கர், பி.வி.ரமணாவுக்கு எதிரான குட்கா வழக்கில் முடக்கப்பட்ட சொத்துகளை விடுவிக்க சி.பி.ஐ. கோர்ட்டு மறுத்துவிட்டது.
சென்னை,
ரூ.250 கோடி வரி ஏய்ப்பு புகாரில் சென்னை செங்குன்றம் பகுதியில் மாதவராவ் என்பவர் நடத்தி வந்த குட்கா குடோனில் கடந்த 2016-ம் ஆண்டு வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர்.
அங்கு கிடைத்த டைரியில், அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா மற்றும் சென்னை மாநகராட்சி, உணவு பாதுகாப்புத்துறை, மத்திய கலால் வரித்துறை அதிகாரிகள், உயர் போலீஸ் அதிகாரிகள் பலர் தடை செய்யப்பட்ட குட்காவை விற்பனைக்கு அனுமதிக்க கோடிக்கணக்கான ரூபாய் லஞ்சம் வாங்கிய தகவல்கள் இடம் பெற்றிருந்தன.
இதுதொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து முன்னாள் அமைச்சர்கள் டாக்டர் சி.விஜயபாஸ்கர், பி.வி. ரமணா, முன்னாள் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், சென்னை முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் ஆகியோரின் வீடுகளில் சி.பி.ஐ. சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தது.
தமிழக அரசு அனுமதி
மேலும், இவர்கள் மீது குற்றச்சாட்டை பதிவு செய்ய தமிழக அரசு அனுமதி அளித்தது. இதைத்தொடர்ந்து இவர்களுக்கு சம்மன் அனுப்பி சி.பி.ஐ. விசாரணை மேற்கொண்டது.
இந்த வழக்கு விசாரணை சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள சி.பி.ஐ. கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் மாதவராவ் உள்ளிட்ட 6 பேர் மீது ஏற்கனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த மாதம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, முன்னாள் அமைச்சர்கள், உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு எதிராக கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இதில் சில குறைகள் இருப்பதை சுட்டிக்காட்டிய நீதிபதி, சாட்சிகள் குறித்த விவரங்கள், அவர்களின் வாக்குமூலங்களை இணைத்து, திருத்தப்பட்ட கூடுதல் குற்றப்பத்திரிகையை மீண்டும் தாக்கல் செய்ய சி.பி.ஐ.க்கு உத்தரவிட்டது.
விசாரணை தள்ளிவைப்பு
இந்தநிலையில் நேற்று அந்த வழக்கு நீதிபதி மலர் வாலண்டினா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அமைச்சர்கள், உயர் போலீஸ் அதிகாரிகள் என 11 பேருக்கு எதிராக சி.பி.ஐ. குற்றம்சாட்டிய நிலையில் சிலருக்கு எதிராக குற்றச்சாட்டை பதிவு செய்ய மத்திய அரசு இதுவரை ஒப்புதல் தரவில்லை என சி.பி.ஐ. தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட கூடுதல் குற்றப்பத்திரிகையில் சுட்டி காட்டப்பட்ட பிழைகளை முழுமையாக திருத்தி தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி, யார் யாருக்கு எதிராக வழக்கை நடத்த மத்திய, மாநில அரசுகளிடம் இருந்து அனுமதி பெறப்பட்டுள்ளது என்பது குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு விசாரணையை அடுத்த மாதம் (ஜனவரி) 10-ந்தேதிக்கு தள்ளிவைத்தார்.
சொத்துகளை விடுவிக்க மறுப்பு
இதற்கிடையே இந்த வழக்கிற்கு தொடர்பு இல்லாத முடக்கப்பட்ட அசையா சொத்துகளை விடுவிக்க வேண்டும் என குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதற்கு நீதிபதி, வழக்கின் திருத்தப்பட்ட கூடுதல் குற்றப்பத்திரிகையை சி.பி.ஐ. தாக்கல் செய்யாத நிலையில் சொத்துகளை விடுவிக்க முடியாது எனக்கூறி அந்த கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டார்.