முன்னாள் அமைச்சர் வளர்மதிக்கு எதிரான வழக்கு டிசம்பர் 4-ந்தேதிக்கு தள்ளிவைப்பு

தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்த ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது

Update: 2023-11-06 19:42 GMT

கோப்புப்படம்

சென்னை,

சொத்துகுவிப்பு வழக்கில் இருந்து முன்னாள் அமைச்சர் வளர்மதி விடுவிக்கப்பட்ட வழக்கை சென்னை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது. இந்த வழக்கில் வரும் டிசம்பர் 4-ம் தேதி தனது தரப்பு வாதங்களைத் தொடங்க வேண்டுமென வளர்மதி தரப்பிற்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த 2001-06-ம் ஆண்டுகளில் நடந்த அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் சமூக நலத்துறை அமைச்சராக இருந்த பா.வளர்மதி, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், பா.வளர்மதி, அவரது கணவர் மற்றும் மகன்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டன. இந்த வழக்கில், இவர்கள் அனைவரையும் விடுவித்து, ஊழல் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டு கடந்த 2012-ம் ஆண்டு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யும் வகையில் சென்னை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது. இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வளர்மதி சார்பில் மூத்த வக்கீல் ஜான் சத்யன் ஆஜராகி, "தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்த ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது" என்று கூறினார். இதையடுத்து, இந்த வழக்கு விசாரணையை டிசம்பர் 4-ந்தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி, அன்று இந்த வழக்கின் வாதங்களை தொடங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்