நிரந்தர டாக்டர் இல்லாததால் கால்நடை வளர்ப்பவர்கள் அவதி
வால்பாறை கால்நடை ஆஸ்பத்திரியில் நிரந்தர டாக்டர் இல்லாததால் கால்நடை வளர்ப்பவர்கள் அவதியடைந்து வருகின்றனர். இதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.;
வால்பாறை,
வால்பாறை கால்நடை ஆஸ்பத்திரியில் நிரந்தர டாக்டர் இல்லாததால் கால்நடை வளர்ப்பவர்கள் அவதியடைந்து வருகின்றனர். இதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
கால்நடை ஆஸ்பத்திரி
வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுகளில் உள்ள கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 1968-ம் ஆண்டு வால்பாறை எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் அரசு கால்நடை ஆஸ்பத்திரி அமைக்கப்பட்டது. அங்கு நிரந்தர டாக்டர் நியமிக்கப்பட்டு செயல்பட்டு வந்தது. ஆஸ்பத்திரி வளாகத்திலேயே டாக்டர் குடியிருப்பும் அமைக்கப்பட்டு இருந்தது. இதன் மூலம் டாக்டர் அங்கேயே தங்கி பணிபுரிந்து வந்தார்.
இந்தநிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நிரந்தர டாக்டர் நியமிக்கப்படவில்லை. இதனால் அவ்வப்போது டாக்டர்கள் வருவதும், சில நாட்களில் திரும்பி செல்வதும் வாடிக்கையானது. மேலும் பொள்ளாச்சி வட்டாரத்தில் இருந்து தற்காலிகமாக டாக்டர் வந்து சென்று கொண்டிருந்தார். கடந்த ஓராண்டாக நிரந்தர டாக்டர் நியமிக்கப்படாமல் உள்ளது.
டாக்டர் இல்லை
இதனால் கால்நடை ஆய்வாளர் மட்டும் பணியில் இருந்து வருகிறார். அவர் ஆஸ்பத்தரிக்கு கொண்டு வரப்படும் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கிறார். மேலும் எஸ்டேட் பகுதிகளில் நோய்வாய்ப்பட்ட கால்நடைகளுக்கு நேரில் சென்று சிகிச்சை அளித்து வருகிறார். நிரந்தர டாக்டர், பணியாளர்கள் இல்லாததால் ஆஸ்பத்திரியில் கால்நடைகளுக்கு சிறப்பு சிகிச்சை, செல்ல பிராணிகளுக்கு சிகிச்சை அளிப்பது, அலுவலக பணி போன்ற பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது.
மேலும் கால்நடை ஆஸ்பத்திரிக்கு டாக்டர், பணியாளர்கள் நியமிக்கப்படாததால், வாட்டர் பாய்லர், இருமலை, சோலையாறு நகர் ஆகிய பகுதிகளில் கால்நடை ஆஸ்பத்திரிகளை செயல்பாட்டுக்கு கொண்டு வரமுடியாத நிலை காணப்படுகிறது. இதனால் விவசாயிகள் தங்களது கால்நடைகளை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றும், ஏமாற்றத்துடன் திரும்ப வேண்டி உள்ளது. இதன் காரணமாக கால்நடை வளர்ப்பவர்கள், செல்ல பிராணிகளை வளர்ப்பவர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
நியமிக்க வேண்டும்
எனவே, அரசு கால்நடை ஆஸ்பத்திரிக்கு நிரந்தர டாக்டரை நியமனம் செய்ய வேண்டும். மேலும் டாக்டர் குடியிருப்பை பராமரிக்க வேண்டும். கருமலை, வாட்டர் பால்ஸ், சோலையாறு நகர் ஆகிய இடங்களில் உள்ள கிளை கால்நடை ஆஸ்பத்திரிகளை செயல்பாட்டுக்கு கொண்டு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கால்நடை வளர்ப்பவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.