ஆடிப்பெருக்கு விழா கொண்டாட்டம் 18 வகையான பலகாரங்கள் படைத்து சுமங்கலி வழிபாடு

நெல்லை தாமிரபரணி ஆற்றங்கரையில் ஆடிப்பெருக்கு விழா கொண் டாடப்பட்டது. இதையொட்டி 18 வகையான பலகாரங்கள் படைத்து பெண்கள் சுமங்கலி வழிபாடு நடத்தினர்;

Update:2022-08-04 02:09 IST

நெல்லை தாமிரபரணி ஆற்றங்கரையில் ஆடிப்பெருக்கு விழா கொண் டாடப்பட்டது. இதையொட்டி 18 வகையான பலகாரங்கள் படைத்து பெண்கள் சுமங்கலி வழிபாடு நடத்தினர்.

ஆடிப்பெருக்கு

ஆடி மாதம் என்பது அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. ஆடி 18-ம் பெருக்கென்று சப்த கன்னிகளை வணங்கி வழிபட்டால் நன்மை பயக்கும் என்பது ஐதீகம். அதேபோல் 18-ம் பெருக்கு அன்று காவிரி, தாமிரபரணி, வைகை உள்ளிட்ட ஆறுகளை பல நூற்றாண்டுகளாக பொதுமக்கள் வழிபட்டு வருகின்றனர். அங்கு மலர் தூவி, தீபாராதனை காட்டி வழிபடுவார்கள்.

அதன்படி தமிழகத்தில் வற்றாத ஜீவநதியான தாமிரபரணி ஆற்றங்ரையில் ஆடி 18-ம் பெருக்கு நாளான நேற்று 18 வகையான நைவேத்தியங்கள் படைத்து மக்கள் வழிபட்டனர். புதுமண தம்பதிகள் மற்றும் பெண்கள் சிறப்பு வழிபாடு நடத்தி, தாலி பிரித்துக்கட்டும் வைபவம் நடத்தினர்.

சுமங்கலி வழிபாடு

நெல்லை குறுக்குத்துறை தாமிரபரணி ஆற்றங்கரையில் சுப்பிரமணிய சுவாமி கோவில் படித்துறையில் திரளான பெண்கள் நேற்று காலை முதலே திரண்டு வந்தனர். தாமிரபரணி நதிக்கு 18 வகையான பலகாரங்கள் படைத்து சுமங்கலி வழிபாடு நடத்தினர்.

தொடர்ந்து புதுமண தம்பதிகள் மட்டுமல்லாது ஏற்கனவே திருமணமான பெண்களும் கலந்து கொண்டு தாலி பிரித்து கட்டும் சடங்குகள் செய்து தாமிரபரணி அன்னையை வழிபட்டனர்.

ஆடி 18-ம் பெருக்கையொட்டி நெல்லை குறுக்குத்துறை சுப்பிரமணியசாமி கோவிலில் சுவாமி வெள்ளி அலங்காரத்தில் எழுந்தருளி, சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது.

விஸ்வ இந்து பரிஷத்

நேற்று மாலையில் விஸ்வ இந்து பரிஷத் சார்பில் நெல்லை சந்திப்பு வரதராஜ பெருமாள் கோவில் முன்பு தொடங்கி சந்திப்பு கைலாசநாதர் கோவில் வரை தாமிரபரணி நதிக்கு உரிய சீர்வரிசைகளை எடுத்து கொண்டு ஊர்வலமாக வந்து தைப்பூச மண்டபத்தில் தாமிரபரணி நதிக்கு பூஜை செய்து சீர்வரிசை செய்யும் சிறப்பு நிகழ்ச்சி நடந்தது.

மகா ஆரத்தி

நெல்லை அருகன்குளம் எட்டெழுத்துபெருமாள் கோவில் கோசாலையில் ஜடாயு படித்துறையில் தாமிரபரணி நதிக்கு பட்டுப்புடவை உள்ளிட்ட சீர்வரிசை செய்து மகாஆரத்தி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

நெல்லை அருகன்குளம் ராமலிங்கசுவாமி கோவிலில் ஆடிப்பெருக்கையொட்டி சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. இதைத்தொடர்ந்து பர்வதவர்த்தினி அம்மனுக்கு வளைகாப்பு வைபவம் நடந்தது.

அம்பை

அம்பை தாமிரபரணி காசிநாதர் படித்துறையில் ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு நூறுக்கும் மேற்பட்ட பெண்கள் தாலிபெருக்கும் நிகழ்ச்சி நடத்தினர். மேலும் காசிநாதர் கோவிலில் இருந்து தாமிரபரணி நதிக்கு ஆரத்தி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தாமிரபரணி நதிக்கு 18 வகையான பலகாரங்கள் படைத்து பெண்கள் சுமங்கலி வழிபாடு நடத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்