கோவில் நிலத்தில், அனுமதியின்றி நெடுஞ்சாலைத்துறை பணிகள் - தமிழக அரசு பதிலளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
கொல்லிமலையில் உள்ள அறப்பளீஸ்வரர் கோவில் நிலத்தில் அனுமதியின்றி நெடுஞ்சாலைத்துறை பணிகளை மேற்கொள்வது குறித்து தமிழக அரசு பதிலளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது
சென்னை,
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் உள்ள அறப்பளீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான 200 ஏக்கர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும் அதனை மீட்க வேண்டும் என்றும் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் ராஜசேகர் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் 138 ஆக்கிரமிப்பாளர்கள் கண்டறியப்பட்டு அவர்களை அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் கோவிலுக்கு சொந்தமான 13 ஏக்கர் நிலத்தை அறநிலையத்துறை அனுமதியின்றி நெடுஞ்சாலை பணிக்காக பயன்படுத்தப்பட்டுள்ளதாக மனுதாரர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.
இது குறித்து தமிழக அரசு பதிலளிக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை வருகிற ஆகஸ்ட் 28-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.