உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத சிதம்பரம் ரெயில் நிலையம்

சரியான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத சிதம்பரம் ரெயில்நிலையத்தால், உள்ளூர் பயணிகள் தொடங்கி உலக பயணிகள் வரைக்கும் அதிருப்தியடைந்து வருகின்றனர்.

Update: 2022-11-08 19:16 GMT

சிதம்பரம்,

கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் நகரம் முக்கிய பகுதியாக விளங்குகிறது. ஏனெனில் உலக புகழ்பெற்ற நடராஜர் கோவில் மற்றும் பழமைவாய்ந்த அண்ணாமலை பல்கலைக்கழகம் ஆகியன அமைய பெற்ற நகரமாக இருக்கிறது. அதேபோன்று பிச்சாவரம் சுற்றுலா மையமும் இதனருகே தான் அமைய பெற்றுள்ளது. இதனால் உள்ளூர் பயணிகள் மட்டுமின்றி உலகின் பல்வேறு இடங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.

விபத்தில் சிக்கும் பயணிகள்

இவர்களது போக்குவரத்துக்கு கை கொடுககும் விதமாக சிதம்பரம் நகருக்கு பல்வேறு இடங்களில் இருந்தும் ரெயில் சேவையும் அமைய பெற்று இருக்கிறது. தினசரி இதன் வழியாக 40-க்கும் மேற்பட்ட ரெயில்கள் வந்து செல்கின்றன. பயணிகளுக்கு ஏற்றவகையில் ரெயில் நிலையமும் நகரின் மையப்பகுதியில் அமைய பெற்று இருக்கிறது. ரெயில் நிலையத்தின் அமைவிடம் சிறப்பானதாக இருந்தாலும், அங்குள்ள வசதிகள் என்பது மெச்சும்விதமாக இல்லை என்பது தான் வேதனைக்குரியது.

அதாவது, இங்கு வரும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் பயணிகள் ஏற இருக்கும் பெட்டி(கோச்) எந்த இடத்தில் இருக்கிறது என்பதை பயணிகள் அறிந்து கொள்ள எந்த அறிவிப்பு (டிஜிட்டல் போர்டு) பலகைகளும் இல்லாமல் இருக்கிறது.

இதனால் ரெயில் வந்து நிற்கும் அந்த 2 நிமிடங்களில் பயணிகள் அவசரஅவசரமாக ஏறும் நிலை ஏற்பட்டுள்ளது. முன்பதிவில்லா பெட்டியில் பயணிக்கும் பயணிகளின் நிலை மிகவும் மோசமாகும். அவசரமாக ஓடி சென்று ஏறும் இவர்களில் சிலர், தவறி விழுந்து விபத்தில் சிக்கும் நிலையும் நீடிக்கிறது.

திறக்கப்படாத கழிப்பறைகள்

அதேபோன்று, ரெயில் நிலையத்தில் இருக்கும் கழிப்பறைகள் எப்போதும் பூட்டியே கிடக்கிறது. பொது சுகாதாரம் குறித்து அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், அதை பின்பற்றாமல் இருப்பதில் இந்த ரெயில்நிலையத்துக்கும் ஒரு பங்கு இருப்பதாக இங்கு வருகை தரும் பயணிகள் குற்றம்சாட்டுகிறார்கள். மேலும், பயணிகள் காத்திருப்பு கூடத்தில் உள்ள கழிவறை பராமரிப்பின்றி கிடந்து வருகிறது.

சிதம்பரம் ரெயில் நிலையத்தில் மாற்றுத்திறனாளி செல்லும் சைக்கிள்கள் மிகவும் பழுதடைந்து உள்ளது. இதை மிகுந்த சிரமத்துடன் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தி வருகிறார்கள்.

மழையில் ஒழுகும் மேற்கூரைகள்

அடுத்ததாக உள்ள பெரும் பிரச்சினை இங்குள்ள மேற்கூரை. பல இடங்களில் மேற்கூரை உடைந்து போய் உள்ளது. இதனால் மழை பெய்தால் தண்ணீர் உள்ளே ஒழுகி வருகிறது. இதனால், ரெயிலுக்காக காத்திருக்கும் பயணிகள், மழையில் நனைந்து விடுகிறார்கள். ரெயில் நிலையத்தில் குறிப்பிட்ட சில இடங்களில் மட்டுமே மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது. அதுவும் மழைக்கு ஒழுகுவதால், இங்கு வரும் பயணிகள் எங்கு நிற்பது என்று தெரியாமல் பரிதவிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். 2-வது நடைமேடையில் மேற்கூரையே இல்லாத நிலை தான் உள்ளது.

குடிநீர் வருவதில்லை

ரெயில் நிலையத்தில் உள்ள குழாய்களில் குடிநீர் வருவதில்லை. இதனால் ரெயில் நின்றவுடன் அதில் இருந்து குடிநீர் பிடிக்க இறங்கும் பயணிகள் ஏமாற்றதுடன் செல்கிறார்கள். இவ்வாறாக சிதம்பரம் ரெயில்நிலையத்தில் பயணிகளுக்கான தேவைகள் என்பது முழுமை பெறாமல் இருக்கிறது. அதேபோன்று நாய்கள் தொல்லையும் அதிகரித்து, பயணிகளை அச்சுறுத்தி வருகிறது.

இவ்வாறாக உள்கட்டமைப்பு வசதிகள் முழுமையாக இல்லாததால், உள்ளூர் பயணிகள் மட்டுமின்றி உலகபயணிகள் வரைக்கும் ரெயில் நிலையத்தால் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள். ஆகவே பயணிகளின் அடிப்படை தேவைகளை உடனுக்குடன் சரி செய்து, ரெயில் நிலையத்தை நவீனப்படுத்த அதிகாரிகள் தேவையான ஆக்கப்பூர்வ நடவடிகையை எடுக்க வேண்டும் என்று நகர மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

இதுகுறித்து நகர மக்கள் தெரிவித்த கருத்துகள் குறித்து பார்ப்போம்:-

சிதம்பரத்தை சேர்ந்த பாலாஜி:-

இரவு நேரத்தில் சிதம்பரம் ரெயில் நிலையத்தில் இருந்து இறங்கி செல்வது மிகவும் சிரமமாக உள்ளது. ஏனெனில் ரெயில் நிலையத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் பஸ்நிலையம் உள்ளது. இங்கு நடந்து தான் செல்ல வேண்டும் என்பதால், இரவில் அச்சத்துடன் செல்ல வேண்டியுள்ளது. எனவே ரெயில் நிலையத்தில் இருந்து பஸ் நிலையத்துக்கு பஸ்வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.

சிதம்பரத்தை சேர்ந்த ராமநாதன்:-

ரெயில் நிலையத்தில் 2-வது நடைமேடைக்கு(பிளாட்பாரத்துக்கு) செல்ல ஒரே ஒரு பாலம் மட்டும் இருக்கிறது. அதுவும் ரெயில்நிலையத்தில் இருந்து மிக தொலைவில் அமைந்துள்ளது. இதனால் பயணிகள் அந்த பாலத்தை பயன்படுத்தாமல், தண்டவாளத்தில் இறங்கி கடந்து செல்கிறார்கள். இது ஆபத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. எனவே மற்றொரு பாலம் அமைத்து பயணிகள் பாதுகாப்புடன் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோன்று ரெயில் நிலையத்தில் நிலவும் பல்வேறு அடிப்படை பிரச்சினைகளையும் ரெயில்வே நிர்வாகம் சரிசெய்ய வேண்டும்.

சிதம்பரத்தை சேர்ந்த சோமு:-

சிதம்பரத்துக்கு உலகெங்கும் இருந்தும் பயணிகள் வருகிறார்கள். ஆனால் ரெயில் நிலையத்தில் உள்ள அடிப்படை வசதிகள் அவர்களது தேவையை பூர்த்தி செய்வதாக இல்லை. கழிவறைகள் பூட்டி கிடப்பதுடன், திறந்து இருக்கும் ஒரு கழிப்பறையும் தண்ணீர் வசதி இல்லாத நிலையில் இருக்கிறது. குடிநீர் வசதியையும் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.மேலும், ரெயில் நிலையத்தில் இருந்து சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு பக்தர்கள் எளிதில் வந்து செல்லும் விதமாக பஸ் வசதியும் ஏற்படுத்த வேண்டும் . இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்