பள்ளி மாணவியிடம் சில்மிஷம் தொழிலாளிக்கு 3 ஆண்டு சிறை

பள்ளி மாணவியிடம் சில்மிஷம் செய்த தொழிலாளிக்கு 3 ஆண்டு சிறை விழுப்புரம் போக்சோ கோர்ட்டு தீர்ப்பு

Update: 2023-06-06 18:45 GMT

விழுப்புரம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் தாலுகாவுக்குட்பட்ட கிராமத்தை சேர்ந்த 15 வயது மாணவி, கடந்த 2021-ம் ஆண்டு 10-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 23.5.21 அன்று அதே பகுதியில் உள்ள தனது நிலத்தில் வாழைப்பூ பறிக்கச்சென்ற மாணவியை அங்கு வந்த வடகீரனூர் கிராமத்தை சேர்ந்த நிஷார் (50)என்ற தொழிலாளி சில்மிஷம் செய்தார்.

உடனே மாணவி, அங்கிருந்து வீட்டிற்கு ஓடிவந்து நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் கூறி அழுதார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் திருக்கோவிலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் நிஷார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

இதுதொடர்பான வழக்கு விசாரணை விழுப்புரம் போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கில் அரசு தரப்பில் சாட்சிகள் விசாரணை முடிந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி ஹெர்மிஸ், குற்றம் சாட்டப்பட்ட நிஷாருக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்தும், மேலும் பாதிக்கப்பட்ட மாணவிக்கு இழப்பீடாக ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்தை அரசு வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பு கூறினார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கலா ஆஜரானார்.

Tags:    

மேலும் செய்திகள்