பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
மாம்பாக்கத்தில் ஆக்கிரமிப்பு அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.;
சாலை விரிவாக்கம்
ராணிப்பேட்டை மாவட்டம் கலவையை அடுத்த மாம்பாக்கம்- வாழப்பந்தல் சாலை, செய்யாறு- ஆரணி சாலை நெடுஞ்சாலை துறையினரால் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக ஒரு ஆண்டுக்கு முன்பே அங்குள்ள கடை, வீடுகளுக்கு முறையாக நோட்டீஸ் கொடுத்து அப்புறப்படுத்தினர்.
இந்த சாலையில் எம்.ஜி.ஆர், அம்பேத்கர் சிலை, ஆஞ்சநேயர் சிலை உள்ளது. இந்த சிலைகளை அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். நேற்று முன்தினம் சிலையை அகற்றுவது குறித்து ஆலோசனை கூட்டம் கலவை தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் இந்துமதி தலைமையில் நடந்தது. நெடுஞ்சாலைத் துறை அதிகாரி சரவணன், போலீஸ் இன்ஸ்பெக்டர் காண்டியப்பன், வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயஸ்ரீ, தீயணைப்பு துறையினர, அனைத்துக் கட்சியினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
சாலை மறியல்
இதில் எம்.ஜி.ஆர். சிலை, ஆஞ்சநேயர் சிலையை மட்டும் அகற்றுவது என தீர்மானிக்கப்பட்டு வருகிற 28-ந் தேதி அகற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அம்பேத்கர் சிலையை சாலையின் நடுவில் அமைக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கோரிக்கை வைத்தனர். அதற்கு அதிகாரிகள் தங்கள் மேல் அதிகாரிகளுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று கூறியுள்ளனர்.
இந்தநிலையில் நேற்று நெடுஞ்சாலைத் துறையினர் சாலை ஓரம் உள்ள வீடுகளை அகற்றுவதற்கு நோட்டீஸ் வழங்கி உள்ளனர். அப்போது ஒருசில இடங்களில் ஆக்கிரமிப்பு அகற்றாமல் உள்ளதை பொதுமக்கள் சுட்டிக்காட்டி அவற்றை அகற்ற வேண்டும் என்று கூறி மாம்பாக்கம்- வாழப்பந்தல், ஆரணி-செய்யார் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த ராணிப்பேட்டை துணைபோலீஸ் சூப்பிரண்டு பிரபு, இன்ஸ்பெக்டர் காண்டியப்பன், தாசில்தார் இந்துமதி ஆகியோர் சென்று பேச்சுவார்த்தை நடத்தி மறியலை கைவிட செய்தனர். இந்த மறியலால் சுநமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.