வடிவேலு, நயன்தாராவுக்கும் கூட்டம் கூடும்: விஜய் குறித்து செல்லூர் ராஜு பரபரப்பு பேட்டி
தமிழக அரசியலில் ஆலமரமாக உள்ள அ.தி.மு.க.வை விமர்சிக்கக்கூடாது என்று செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.;
மதுரை,
ஈரோட்டில் நடந்த பொதுக்கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், களத்தில் இல்லாதவர்களை நாங்கள் எதிர்க்க மாட்டோம் என கூறியிருந்தார். இந்த நிலையில், நாங்கள் களத்தில் இருக்கிறோமா இல்லையா என்பதை மக்கள் முடிவு செய்வார்கள் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
முன்னதாக மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதியில் புதிதாக அமைக்கப்பட உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்திற்கு பூமிபூஜை, அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் நேற்று நடந்தது.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
வானத்தில் ஒரே சந்திரன்தான். அது போல் பூமியில் ஒரே ஒரு ராமச்சந்திரன்தான். எல்லோரும் எம்.ஜி.ஆர். ஆகிவிட முடியாது. நடிகர்களை பார்க்க கூட்டம் கூடுவார்கள். விஜய் நடிகர் என்பதால் மற்ற நடிகரை விட கொஞ்சம் கூட்டம் அதிகமாக கூடுகிறது. இவரை விட வடிவேலு, நயன்தாராவுக்கு கூட்டம் கூடும். அ.தி.மு.க. களத்தில் இல்லை எனக்கூற எவ்வளவு தைரியம்? அ.தி.மு.க. களத்தில் இருக்கிறமோ இல்லையா என்பதை மக்கள்தான் தீர்மானிப்பார்கள். தலைமைக்கழகத்தில் விருப்ப மனு வாங்கும் இடத்தில் கூட்டத்தை பார்த்தால் தெரியும், யார் தேர்தல் களத்தில் இருக்கிறார்கள் என்று.
தமிழக அரசியலில் ஆலமரமாக உள்ள அ.தி.மு.க.வை விமர்சிக்கக்கூடாது. நேற்று வந்த விஜய்க்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. ஏற்கனவே நடிகர்கள் சிவாஜி கணேசன், டி.ராஜேந்தர், பாக்கியராஜ், கமல்ஹாசன் ஆகியோர் கட்சி தொடங்கினார்கள். அவர்களைப்போல விஜய் ஆகிவிடக்கூடாது. எனவே விஜய் மற்ற கட்சிகளை விமர்சிக்கும்போது நாவை அடக்கி பேச வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.