முன்னாள் படைவீரர்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கொடி நாள் இலக்கை எய்திய அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் கலெக்டர் பழனி வழங்கினார்

முன்னாள் படைவீரர்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கொடி நாள் இலக்கை எய்திய அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழை கலெக்டர் பழனி வழங்கினார்.

Update: 2023-06-16 18:45 GMT

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முன்னாள் படைவீரர் நலத்துறையின் மூலம் முன்னாள் படைவீரர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் சி.பழனி தலைமை தாங்கி முன்னாள் படைவீரர்களிடம் குறைகளை கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். மனுக்களை பெற்ற அவர், இதன் மீது விரைவில் தீர்வு காணப்படும் என்று உறுதியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இக்கூட்டத்தின் முக்கிய நோக்கம் முன்னாள் படைவீரர் நலத்துறையின் மூலம் படைவீரர்கள் மற்றும் படைவீரர்களை சார்ந்த குடும்ப உறுப்பினர்களுக்கான நலத்திட்டங்கள் வழங்கப்படுவதுடன் அவர்களுக்கான கோரிக்கைகள் குறித்தும் பரிசீலித்து உரிய தீர்வு வழங்கப்பட்டு வருகிறது. பொதுவாக முன்னாள் படைவீரர்களின் வாரிசுகளுக்கு குடும்பத்தில் ஒருவருக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படுகிறது. இரண்டாம் உலகப்போர் நிதியுதவி ரூ.6 ஆயிரத்திலிருந்து ரூ.10 ஆயிரமாகவும், இரண்டாம் உலகப்போர் நிதியுதவி (விதவை) ரூ.3 ஆயிரத்தில் இருந்து ரூ.4 ஆயிரமாகவும், மருத்துவ நிதியுதவி ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.7 ஆயிரமாகவும், உடல் ஊனமுற்றோர் மற்றும் உடல்வளர்ச்சி குன்றியவர்களுக்கு நிதியுதவியாக ரூ.5 ஆயிரமும், கண் கண்ணாடி நிதியுதவியாக ரூ.3 ஆயிரத்தில் இருந்து ரூ.4 ஆயிரமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இத்திட்டம் தற்போது படைவீரர்களின் மனைவிக்கும் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

கல்வி உதவித்தொகை

மேலும் மாதாந்திர நிதியுதவியாக ரூ.3 ஆயிரத்தில் இருந்து ரூ.4 ஆயிரமாகவும், திருமண நிதியுதவியாக ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.25 ஆயிரமாகவும் தற்போது இரு மகள்களுக்கும் வழங்கும் வகையில் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி மருத்துவம் மற்றும் பொறியியல் கல்விகளில் முன்னாள் படைவீரர்களின் வாரிசுகளுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டு கல்வி உதவித்தொகையும் வழங்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து, 3 பேருக்கு ரூ.65 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் படைவீரர் கொடிநாள் 2021 ஆண்டிற்கான வசூல் இலக்கினை எய்திய 5 துறை அலுவலர்களுக்கு பாராட்டுச்சான்றிதழ்களை கலெக்டர் சி.பழனி வழங்கினார்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் யசோதாதேவி, முன்னாள் படைவீரர் நலத்துறை உதவி இயக்குனர் அருள்மொழி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) சரவணன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ராஜேஷ்வரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்