அரசு பஸ் மீது விழுந்த மின் கம்பம் - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்
மின் கம்பிகள் அறுந்து விழுந்த நிலையில், அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர்.;
நீலகிரி,
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இருந்து பெந்தட்டிக்கு அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ்சில் எப்பநாடு, கொரனூர், கெங்கமுடி பகுதிகளை சேர்ந்த பொதுமக்களும் பயணம் செய்து வருகின்றனர். இப்பகுதிக்கு இந்த ஒரு பஸ் மட்டும் இயக்கப்படுவதால், எப்போதும் பயணிகள் கூட்டம் காணப்படும்.
இந்தநிலையில் மதியம் 2 மணிக்கு பெந்தட்டியில் இருந்து ஊட்டிக்கு அரசு பஸ் புறப்பட்டு சென்றது. பஸ்சை டிரைவர் ஜெயபிரகாஷ் ஓட்டினார். கண்டக்டராக ரவிக்குமார் இருந்தார். பாரஸ்ட் கேட் பகுதியில் சென்ற போது, எதிரே வந்த லாரிக்கு வழிவிடுவதற்காக அரசு பஸ்சை டிரைவர் சாலையோரம் ஒதுக்கி நிறுத்தினார். இருப்பினும், அரசு பஸ்சும், லாரியும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் லாரியை சாலையில் இருந்து சற்று கீழே இயக்கி அதன் டிரைவர் நிறுத்தியதாக தெரிகிறது.
மின் கம்பம் விழுந்தது
அப்போது லாரி எதிர்பாராத விதமாக சாலையோரம் இருந்த மின் கம்பம் மீது உரசியதால், மின்கம்பம் கீழே விழுந்தது. அந்த சமயத்தில் எதிரே இருந்த மற்றொரு மின் கம்பம் அரசு பஸ் மீது டமார் என்ற சத்தத்துடன் விழுந்தது. இதில் பஸ்சின் மேற்கூரை சேதம் அடைந்தது. இதனால் பயந்து போன பயணிகள் 40 பேர் உடனடியாக பஸ்சில் இருந்து அவசர, அவசரமாக கீழே இறங்கினர். அப்போது மின் கம்பிகள் அறுந்து விழுந்தன. இருப்பினும், பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
உடனடியாக இதுகுறித்து மின்சாரத் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் மின்சாரத் துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மின் இணைப்பை துண்டித்து மின் கம்பிகளை சரிசெய்து, அரசு பஸ்சை மீட்டனர். விபத்து காரணமாக அந்த சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும் பயணிகள் மாற்று வாகனங்கள் மூலம் ஊட்டிக்கு வந்தனர்.