சிறுமிக்கு பாலியல் தொந்தரவு; கல்லூரி மாணவர் போக்சோ சட்டத்தில் கைது

விக்கிரவாண்டி அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கல்லூரி மாணவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.;

Update:2025-12-13 23:37 IST

விழுப்புரம்,

விக்கிரவாண்டி அருகே செ.புதூர் கிராமத்தை சேர்ந்தவர் வேளாங்கண்ணி மகன் மில்டன் ஜோஸ்வா (வயது 19). இவர் விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் படித்து வருகிறார்.

இந்நிலையில் சம்பவத்தன்று அதே கிராமத்தை சேர்ந்த 4-ம் வகுப்பு படித்து வரும் 9 வயதுடைய சிறுமியின் பெற்றோர், வேலைக்கு சென்றிருந்த நிலையில் சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்தாள். அப்போது அங்கு வந்த மில்டன் ஜோஸ்வா, அந்த சிறுமியை ஒரு அறைக்கு அழைத்துச்சென்று பாலியல் தொந்தரவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

கல்லூரி மாணவர் கைது

இதனிடையே வேலைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்த பெற்றோரிடம், அந்த சிறுமி நடந்த சம்பவத்தை பற்றி கூறி அழுதுள்ளாள். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், இதுகுறித்து பெரியதச்சூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் போலீசார் விரைந்து சென்று மில்டன் ஜோஸ்வாவை பிடித்து விசாரணை நடத்தினர்.

பின்னர் அவரை விழுப்புரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பெரியதச்சூர் போலீசார் ஒப்படைத்தனர். தொடர்ந்து, மில்டன் ஜோஸ்வா மீது மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவரை விழுப்புரம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

 

Tags:    

மேலும் செய்திகள்