விவசாய தொழிலாளர் சங்கத்தினர் கலெக்டர் அலுவலகம் முற்றுகை
விவசாய தொழிலாளர் சங்கத்தினர் கலெக்டர் அலுவலகம் முற்றுகை;
தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை 200 நாளாக உயர்த்த வலியுறுத்தி விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினார்கள்.
குறைதீர்க்கும் கூட்டம்
கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதில் கலெக்டர் சமீரன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். அவரிடம் பொதுமக்கள் தங்கள் கோரிக்கையை மனுவாக எழுதி கொடுத்தனர். அதை பெற்றுக்கொண்ட அவர் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
இதற்கிடையில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் கோவை மாவட்டக்குழு சார்பில் ஏராளமான விவசாயிகள் கொடி மற்றும் பதாகைகளை கையில் ஏந்தியபடி கலெக்டர் அலுவலகம் வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலக நுழைவுவாயிலில் நின்றபடி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷமும் எழுப்பினார்கள்.
முற்றுகை போராட்டம்
உடனே அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பின்னர் அதில் குறிப்பிட்ட நிர்வாகிகள் கலெக்டரிடம் சென்று தங்கள் கோரிக்கையை மனுவாக எழுதி கொடுத்தனர். அதில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் 100 நாட்கள் வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது. இந்த வேலை சரியாக அனைவருக்கும் வழங்கப்படுவது இல்லை. அத்துடன் சம்பளப்பாக்கி பிரச்சினை இருக்கிறது. எனவே இந்த திட்டத்தை 200 நாட்களாக உயர்த்துவதுடன், சம்பள பிரச்சினையை தீர்க்க வேண்டும் என கூறி இருந்தது.
மதுக்கரை அருகே உள்ள சமத்துவநகர் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் கொடுத்த மனுவில், கோவை அருகே உள்ள அறிவொளி நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் மொத்தம் 400 பேர் குடியிருந்து வருகிறார்கள். எங்களுக்கு 2 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. தற்போது வாரத்துக்கு முறை மட்டுமே வினியோகிக்கப்பட்ட வருகிறது. எனவே இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
கூடுதல் விலைக்கு விற்பனை
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில், கோவை மாவட்டத்தில் போதை பொருட்களின் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே பள்ளி மற்றும் கல்லூரிகளில் போதைக்கு எதிரான குழு அமைக்க வேண்டும் என கூறியிருந்தது.
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கொடுத்த மனுவில், தொண்டாமுத்தூர் பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைகளின் அருகே செயல்பட்டு வரும் பார்களில் கூடுதல் விலைக்கு பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் பல பார்கள் விதிமுறைகளை மீறி 24 மணி நேரமும் இயங்கி வருகிறது. எனவே அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மேட்டுப்பாளையம் நகராட்சியில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு நிர்ணயம் செய்த கூலியை வழங்க வேண்டும் என கூறப்பட்டு இருந்தது.
ஆதரவற்ற விதவைகள் சங்கம் சார்பில் கொடுத்த மனுவில், நாங்கள் அனைவரும் விதவைகள் என்ற சான்றிதழை வைத்து உள்ளோம். ஆனால் எங்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படவில்லை. எனவே எங்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும் என கூறப்பட்டு இருந்தது.
கோவைப்புதூர் அறிவொளி நகர் சமத்துவ நகர் அடுக்குமாடி குடியிருப்பு நலச்சங்கம் சார்பில், தண்ணீர், போக்குவரத்து மற்றும் மருத்துவ வசதி செய்து தரக்கோரி மனு கொடுத்தனர்.