அகழிகள் வெட்டும் பணி தொடக்கம்

வனவிலங்குகள் தோட்டத்தில் புகுவதை தடுக்க அகழிகள் வெட்டும் பணி தொடங்கியது.

Update: 2023-01-24 18:45 GMT

கடையநல்லூர்:

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள குற்றாலம், குண்டாறு, பண்பொழி, மேக்கரை, வடகரை, அச்சன்புதூர், சொக்கம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களுக்குள் அவ்வப்போது வனவிலங்குகள் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.

குறிப்பாக, மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதிகளில் இருந்து காட்டு யானைகள் கூட்டம் அவ்வப்போது விவசாய நிலங்களுக்குள் புகுந்து விவசாய பயிர்களை பெருமளவில் சேதப்படுத்துகிறது.

இதுகுறித்து, விவசாயிகள் மாவட்ட கலெக்டரிடம் புகார் அளித்தனர். இதில், நடவடிக்கை எடுக்க வனத்துறையினருக்கு கலெக்டர் ஆகாஷ் உத்தரவு பிறப்பித்தார்.

அதன் அடிப்படையில், தற்போது மேக்கரை பகுதியில் இருந்து கடையநல்லூர் அருகே உள்ள சின்னக்காடு பீட் பகுதி வரை 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு அகழிகள் வெட்டும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த அகழிகளானது சுமார் 10 அடி அகலம், 7 அடி உயரத்தில் தோண்டப்பட்டு வருகிறது. இந்த பணியை, கடையநல்லூர் வன சரகர் சுரேஷ் தலைமையிலான குழுவினர் பார்வையிட்டனர்.

வனவிலங்குகள் இந்த அகழியை தாண்டி விவசாய நிலங்களுக்குள் நுழைய வாய்ப்பு இல்லை என வனத்துறையினர் தெரிவித்தனர்.

மேலும் மழைக்காலங்களில் முறையாக பராமரித்து அகழிகள் மூடாமல் இருக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்