3 ‘அம்ரித் பாரத்’ ரெயில் சேவைகள் இன்று தொடக்கம்: தமிழகம் - மேற்கு வங்காளம் இடையே இயக்கம்

தமிழகம் - மேற்கு வங்காளம் இடையே 3 ‘அம்ரித் பாரத்’ ரெயில் சேவைகள் இன்று தொடங்கப்பட இருக்கிறது.;

Update:2026-01-17 06:22 IST

கோப்புப்படம்

சென்னை,

வந்தே பாரத் ரெயில்களுக்கு இணையாக அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்தும் வகையில் ‘அம்ரித் பாரத்’ ரெயில்கள் தயாரித்து இயக்கப்பட்டு வருகிறது. இவை ஏ.சி. இல்லாத ரெயில் பெட்டிகளை கொண்டது. தமிழகத்தில் முதல் ‘அம்ரித் பாரத்’ ரெயிலானது ஈரோடு - பீகார் ஜோக்பானி இடையே இயக்கப்படுகிறது.

இந்த நிலையில், தமிழகம் - மேற்கு வங்காளம் இடையே புதிதாக 3 ‘அம்ரித் பாரத்’ ரெயில்களை இயக்க ரெயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தது. அதாவது, இந்த ரெயில்களான மேற்கு வங்காள மாநிலம் ஜல்பாய்குரி - திருச்சி, தாம்பரம் - சந்திரகாச்சி, நாகர்கோவில் - ஜல்பாய்குரி இடையே வாராந்திர ரெயில்களாக இயக்கப்பட இருப்பதாக தெரிவித்திருந்தது.

அந்த வகையில், தமிழ்நாட்டை இணைக்கும் 3 அம்ரித் பாரத் ரெயில் சேவை இன்று (சனிக்கிழமை) முதல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட இருக்கிறது.

இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஜல்பாய்குரி - திருச்சி, தாம்பரம் - சந்திரகாச்சி, நாகர்கோவில் - ஜல்பாய்குரி இடையே அம்ரித் பாரத் ரெயில் சேவையானது இன்று தொடங்குகிறது. மேற்கு வங்காள மாநிலம் ரங்கபாணி ரெயில் நிலையத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் 3 ரெயில் சேவை தொடங்கி வைக்கப்படுகிறது.

நாகர்கோவில் - ஜல்பாய்குரி அம்ரித் பாரத் ரெயிலானது (வண்டி எண்-20604) இன்று மதியம் 1.45 மணிக்கு மேற்கு வங்காள மாநிலம் ரங்கபாணி ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு 19-ந் தேதி இரவு 7.15 மணிக்கு நாகர்கோவில் வந்தடையும். இந்த ரெயில் தமிழ்நாட்டின் காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, பழனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, நெல்லை ஆகிய ரெயில் நிலையங்களில் நிற்கும்.

ஜல்பாய்குரி - திருச்சி இடையிலான அம்ரித் பாரத் ரெயிலானது (20610) இன்று மதியம் 1.45 மணிக்கு ஜல்பாய்குரியில் இருந்து புறப்பட்டு 19-ந்தேதி மதியம் 2.15 மணிக்கு திருச்சி வந்தடையும். இந்த ரெயில் எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். தாம்பரம் - சந்திரகாச்சி இடையிலான அம்ரித் பாரத் ரெயிலானது (16107) நாளை (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 2.45 மணிக்கு சந்திரகாச்சியில் இருந்து புறப்பட்டு 19-ந்தேதி மாலை 6.45 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

3 புதிய அம்ரித் பாரத் ரெயில்களுக்கான வழக்கமான ரெயில் இயக்க சேவை குறித்த அறிவிப்புகள் தனித்தனியாக வெளியிடப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்