தை அமாவாசை: ராமேசுவரத்துக்கு சிறப்பு பஸ்கள் இயக்கம்
அதிகாரப்பூர்வ செயலி மூலம் முன்பதிவு செய்து பயணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.;
சென்னை,
அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்திலும் மற்றும் அண்டை மாநிலமான பெங்களூருவில் இருந்தும் பொது மக்கள் தை அமாவாசை அன்று புண்ணியதலமான ராமேசுவரத்திற்கு சென்று தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் மற்றும் திதி வழங்குவதற்கு ஏதுவாக ராமேசுவரத்திற்கு சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
அதன்படி நாளை (ஞாயிற்றுக்கிழமை) தை அமாவாசை வருவதால் இன்று (சனிக்கிழமை) சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்தும், சேலம், கோவை மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களில் இருந்தும் ராமேசுவரத்திற்கும் மற்றும் நாளை ராமேசுவரத்தில் இருந்து சென்னை கிளாம்பாக்கம், சேலம், கோவை மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களுக்கும் கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. மேற்கூறிய இடங்களிலிருந்து www.tnstc.in மற்றும் அதிகாரப்பூர்வ செயலி மூலம் முன்பதிவு செய்து பயணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.