காங்கிரஸ் கவுன்சிலர் மறைவுக்கு இரங்கல்: சென்னை மாநகராட்சி மன்றக்கூட்டம் ஒத்திவைப்பு - மீண்டும் இன்று நடக்கிறது

காங்கிரஸ் கவுன்சிலர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ஒத்திவைக்கப்பட்ட சென்னை மாநகராட்சி மன்றக்கூட்டம் இன்று மீண்டும் நடந்தது.

Update: 2022-11-29 07:10 GMT

பெருநகர சென்னை மாநகராட்சியின் மன்றக்கூட்டம் மேயர் பிரியா தலைமையில் துணை மேயர் மகேஷ்குமார், மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் முன்னிலையில் ரிப்பன் மாளிகை மன்றக்கூடத்தில் நேற்று நடைபெற்றது. மன்றக்கூட்டத்தை திருக்குறள் வாசித்து மேயர் பிரியா தொடங்கி வைத்தார். பின்னர் அவரது முன்னிலையில் கவுன்சிலர்கள் அனைவரும் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இதையடுத்து கடந்த 24-ந்தேதி அன்று உடல்நலக்குறைவால் மரணமடைந்த மாநகராட்சியின் 165-வது வார்டு காங்கிரஸ் கவுன்சிலரும், அக்கட்சியின் தென்சென்னை மேற்கு மாவட்ட தலைவருமான நாஞ்சில் பிரசாத்துக்கு (வயது 56) இரங்கல் தெரிவித்து மேயர் பிரியா தீர்மானம் கொண்டு வந்தார்.

இந்த தீர்மானத்தில் துணை மேயர் மகேஷ்குமார், மாமன்ற தி.மு.க. தலைவர் ராமலிங்கம், 12-வது மண்டல குழுத் தலைவர் சந்திரன் (தி.மு.க.), கவுன்சிலர்கள் கே.பி.கே.சதீஷ்குமார் (அ.தி.மு.க.), சிவராஜசேகரன், எம்.எஸ்.திரவியம், அமிர்தவர்ஷினி (காங்கிரஸ்), ஜெயராமன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு), கோபிநாத் (விடுதலை சிறுத்தைகள் கட்சி) ஆகியோர் பேசி, மறைந்த நாஞ்சில் பிரசாத்துக்கு புகழாரம் செலுத்தினார்கள். பின்னர் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து 2 நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டு நேற்றைய கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து காலை 10 மணிக்கு தொடங்கிய கூட்டம் 10.37 மணியளவில் முடிவடைந்தது. ஒத்திவைக்கப்பட்ட மன்றக்கூட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணியளவில் நடைபெறும் என்று மேயர் அறிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்