மதுபாக்கெட், பாட்டில்கள் பறிமுதல்; 2 பேர் கைது
பெங்களூருவில் இருந்து ராமேசுவரத்திற்கு தனியார் ஆம்னி பஸ் மூலம் கடத்தி வரப்பட்ட மதுபான பாட்டில் மற்றும் மதுபான பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் இது தொடர்பாக 2 பேரை கைது செய்தனர்.;
ராமேசுவரம்,
பெங்களூருவில் இருந்து ராமேசுவரத்திற்கு தனியார் ஆம்னி பஸ் மூலம் கடத்தி வரப்பட்ட மதுபான பாட்டில் மற்றும் மதுபான பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் இது தொடர்பாக 2 பேரை கைது செய்தனர்.
தனியார் ஆம்னி பஸ்
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து நேற்று ராமேசுவரம் வந்த தனியார் ஆம்னி பஸ் ஒன்றில் கள்ளத்தனமாக மது பாட்டில்கள் கடத்தி வருவதாக குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கத்துரை உத்தரவின் பேரில் குற்றப்பிரிவு போலீசார் நேற்று தங்கச்சிமடம் வில்லூண்டி தீர்த்தம் பஸ் நிறுத்தம் பகுதியில் பெங்களூருவில் இருந்து வந்த தனியார் ஆம்னி பஸ்சை நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது அந்த பஸ்சில் 180 எம்.எல். அளவு கொண்ட 48 மதுபான பாக்கெட், ஒரு லிட்டர் கொள்ளளவு கொண்ட 10 மது பாட்டில்கள், 90 எம்.எல். அளவு கொண்ட 96 மதுபான பாக்கெட் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
2 பேர் கைது
இதையடுத்து அந்த மதுபாக்கெட்டுகள் மற்றும் மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக தனியார் ஆம்னி பஸ் டிரைவர் சிவகங்கை அண்ணாமலை நகர் பகுதியை சேர்ந்த கருணாநிதி (வயது 40), ராமேசுவரம் திட்டக்குடி தெருவை சேர்ந்த மணிகண்டன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
பெங்களூருவில் இருந்து தனியார் ஆம்னி பஸ் மூலமாக ராமேசுவரத்திற்கு கொண்டுவரப்பட்ட இந்த மதுபாட்டில்கள் மற்றும் மது பாக்கெட்டுகள் கள்ளத்தனமாக விற்பனை செய்வதற்காக ராமேசுவரத்திற்கு கொண்டுவரப்பட்டது விசாரணையில் தெரியவந்தது.