அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்துக - டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Update: 2023-06-11 08:17 GMT

சென்னை,

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-,

சென்னையில் அரிசி, பருப்பு மற்றும் மளிகைப் பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன. சாதாரண பொன்னி அரிசி விலை கிலோ 35 ரூபாயிலிருந்து ரூ.41 ஆகவும், நடுத்தர வகை பொன்னி அரிசி விலை 48 ரூபாயிலிருந்து 60 ரூபாயாகவும் உயர்ந்திருக்கிறது. ஒரு கிலோ அரிசி விலை ரூ.12 உயர்ந்திருப்பது இதுவே முதல்முறையாகும்.

அதேபோல், கடந்த வாரம் ரூ.118 ஆக இருந்த ஒரு கிலோ துவரம்பருப்பு விலை இப்போது ரூ.42 உயர்ந்து ரூ.160 ஆக அதிகரித்திருக்கிறது. இது 36% உயர்வு ஆகும். இது வரலாறு காணாத ஒன்றாகும். பிற பருப்பு வகைகளின் விலைகளும், மளிகைப் பொருட்களின் விலைகளும் 8% முதல் 20% வரை உயர்ந்திருக்கின்றன. சென்னையில் மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் ஏற்பட்டுள்ள இந்த விலை உயர்வால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆந்திரப் பிரதேசம், கேரளா, கர்நாடகா, மகாராஷ்ட்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வரத்துக் குறைந்ததுதான் இந்த விலை உயர்வுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. தமிழகத்தில் நெல் விளைச்சல் வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்திருக்கும் போதிலும், அரிசி விலை உயர்ந்து கொண்டே செல்வதற்கான காரணம் என்ன? என்பதை அரசு ஆராய வேண்டும். தமிழகத்தில் விளைவிக்கப்படும் நெல் பெரும்பாலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்யப்படுவதுடன், கேரளா போன்ற மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மக்கள் உண்ணும் பொன்னி அரிசி பெரும்பாலும் ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்து தான் கொண்டு வரப்படுகிறது. இது தான் விலை உயர்வுக்குக் காரணம். அரிசி விலை உயர்வைத் தடுக்க தமிழக மக்கள் அதிகம் பயன்படுத்தும் அரிசி வகைகள் தமிழகத்தில் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரிசி, பருப்பு மற்றும் மளிகைப் பொருட்களின் விலை உயர்வை சமாளிக்க முடியாமல் தமிழக மக்கள் கடுமையான அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இதைப் போக்க வேண்டியது தமிழக அரசின் கடமை. இதற்காகத் தான் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அமைச்சரின் தலைமையில் விலைக் கண்காணிப்புக் குழு செயல்பட்டு வருகிறது. சென்னை உட்பட தமிழகம் முழுவதும் அரிசி, பருப்பு மற்றும் மளிகைப் பொருட்களின் விலைகள் அதிகரித்திருப்பது விலை கண்காணிப்புக் குழுவுக்கு தெரியுமா? விலைகளைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு வசதியாக இது குறித்த அறிக்கைகளை விலைக் கண்காணிப்புக் குழு அரசிடம் தாக்கல் செய்ததா? என்பது தெரியவில்லை.

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும். பருப்பு விலையை கட்டுப்படுத்தும் நோக்குடன் நியாயவிலைக்கடைகளில் குடும்ப அட்டைகளுக்கு வழங்கப்படும் துவரம் பருப்பின் அளவை 2 கிலோவாக உயர்த்த வேண்டும். தமிழக அரசு ஏற்கனவே அறிவித்தவாறு நியாயவிலைக்கடைகள் மூலம் மீண்டும் மலிவு விலையில் உளுந்து வழங்க வேண்டும். மளிகைப் பொருட்களையும் நியாயவிலைக்கடைகள் மூலம் மானிய விலையில் வழங்க வேண்டும். அதற்கு வசதியாக விலைக் கட்டுப்பாட்டு நிதியத்திற்கு ஒதுக்கப்படும் நிதியின் அளவை ரூ.100 கோடியிலிருந்து ரூ.1000 கோடியாக உயர்த்தவும் தமிழக அரசு முன்வர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்