கொத்தமல்லி இலை விலை உயர்வு
கடையநல்லூர் மார்க்கெட்டில் கொத்தமல்லி இலை விலை உயர்ந்து விற்பனை செய்யப்பட்டது.;
கடையநல்லூர்:
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நெல் அறுவடைக்கு பின் மல்லி இலை பயிரிடுவது வழக்கம். விளைச்சல் அமோகமாக இருந்தாலும் விவசாயிகளுக்கு கணிசமான லாபம் கிடைக்கும்.
இந்த ஆண்டு கோடை வெயில் ஆரம்பத்தில் வறுத்தெடுத்ததால் மல்லி இலை சரியாக முளைவிக்கவில்லை. முளைத்த மல்லிகளும் கொடூர வெயிலால் பழுத்து விட்டது. அதோடு கடந்த சில நாட்களாக மழையும் சேர்ந்து கொண்டதால் முளையிட்ட பயிர்களும், முளைத்த மல்லி இலைகளும் அழுகி விட்டன. இதன் காரணமாக மல்லி இலை மகசூல் குறைந்துவிட்டது.
கடந்த 10 நாட்களுக்கு முன் கிலோ ரூ.15 முதல் ரூ.20 வரைக்கு விற்ற மல்லி இலை படிப்படியாக உயர்ந்து கடந்த 4 நாட்களுக்கு முன் ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்தநிலையில் நேற்று மாலை கிடுகிடுவென விலை உயர்ந்து கிலோ ரூ.100 ஆனது. சில்லறை விற்பனையில் 100 கிராம் 15 ரூபாயாக உயர்ந்தது.
கடையநல்லூர் மார்கெட்டுக்கு தினமும் 20 மூடை மல்லி இலைகளை விவசாயிகள் கொண்டு வருவார்கள். இப்போது 1 மூடை தான் வருகிறது. மகசூல் இல்லாததால் மதுரையில் இருந்து மல்லி இலை வரவழைக்கப்படுகிறது, என வியாபாரிகள் தெரிவித்தனர்.