மதுரையில் புதிதாக 34 பேருக்கு கொரோனா

மதுரையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் புதிதாக 34 பேர் பாதிக்கப்பட்டனர்.

Update: 2022-06-29 20:56 GMT

மதுரையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் புதிதாக 34 பேர் பாதிக்கப்பட்டனர்.

கொரோனா

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. அந்த வகையில் நேற்று புதிதாக 1,827 பேர் பாதிக்கப்பட்டனர். 764 பேர் குணமடைந்து வீட்டிற்கு சென்றனர். மதுரையை பொறுத்தமட்டில் கடந்த சில தினங்களாக தினசரி பாதிப்பு 20-க்குள் இருந்த நிலையில் நேற்று திடீரென அதிகரித்தது. அதன்படி நேற்று புதிதாக ஒரே நாளில் 34 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது. 450 பேருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் 34 பேருக்கு நோய் தொற்று உறுதியாக இருப்பதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

இதுபோல் நேற்று புதிதாக 15 பேர் குணமடைந்தனர். மதுரையில் கடந்த சில மாதங்களாகவே கொரோனா பாதிப்பால் யாரும் உயிரிழக்கவில்லை. மதுரையில் நேற்று மாலை நிலவரப்படி சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 131 ஆக உயர்ந்துள்ளது.

படிப்படியாக அதிகரிப்பு

இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வந்தவர்களின் மூலம் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் நோய் தொற்று அதிகமாக இருக்கிறது. நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக பொது இடங்களுக்கு செல்லும் போது முகக்கவசம் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மதுரையை பொறுத்தமட்டில் நோய் பாதிப்பு படிப்படியாக அதிகரித்து வருகிறது. பொதுமக்களின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த முடியும். பொது இடங்களுக்கு செல்லும்போது கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும். அதுபோல் 2-ம் கட்ட தவணை தடுப்பூசிக்கு காத்திருப்பவர்கள் மற்றும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதற்கு காத்திருக்கும் நபர்கள் உடனடியாக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு ஆஸ்பத்திரிகளில் தடுப்பூசி செலுத்திகொள்ளவேண்டும். தடுப்பூசி செலுத்திக் கொள்வதன் மூலம் நோய் பாதிப்பு ஏற்பட்டாலும் உயிரிழப்பு ஏற்படாது. எனவே அவசியத்தை உணர்ந்து தடுப்பூசி செலுத்தவேண்டும் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்