விதிமீறலை சுட்டிக்காட்டி விருதுநகர் நகரசபை கூட்டத்தில் கவுன்சிலர்கள் வெளி நடப்பு

விருதுநகர் நகர சபை கூட்டத்தில் விதிமீறலை காரணம் காட்டி கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-06-30 18:10 GMT

விருதுநகர் நகர சபை கூட்டத்தில் விதிமீறலை காரணம் காட்டி கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

நகரசபை கூட்டம்

விருதுநகர் நகர சபையின் சாதாரண கூட்டம் நேற்று நடைபெற்றது. நகரசபைத் தலைவர் மாதவன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் துணைத்தலைவர் தனலட்சுமி, கமிஷனர் சையது முஸ்தபா கமால், என்ஜினீயர் மணி மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கூட்டம் தொடங்கியதும் தி.மு.க. கவுன்சிலர் ஆறுமுகம், விதிமுறைப்படி சாதாரண கூட்டம் நடத்துவதற்கு 3 தினங்களுக்கு முன்பே கூட்ட பொருளை அனுப்பி வைக்க வேண்டும். இதுகுறித்து பலமுறை சுட்டிக்காட்டப்பட்டும் விதிமுறை பின்பற்றப்படவில்லை என்று புகார் கூறினார்.

மேலும் கடந்த கூட்டத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட ஒப்பந்தக்காரருக்கு வேலை கொடுப்பது குறித்து தீர்மானம் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் மீண்டும் அதே நபருக்கு வேலை கொடுக்கப்பட்டுள்ளது என்றும் புகார் கூறப்பட்டது. நகராட்சியில் திட்ட பணிகளுக்கான டெண்டர் விடுவதில் விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படவில்லை என்றும் கவுன்சிலர்கள் பலர் புகார் கூறினர். மேலும் டெண்டர் விதிமுறைகள் மீறல் குறித்து என்ஜினீயர் மணி கூறிய விளக்கம் ஏற்புடையதல்ல என கவுன்சிலர் ஆறுமுகம் தெரிவித்தார்.

வெளிநடப்பு

இதைதொடர்ந்து தி.மு.க. கவுன்சிலர்கள் ஆறுமுகம், முத்துராமன், அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெங்கடேஷ், சரவணன், மிக்கேல் ராஜ், அ.ம.மு.க. கவுன்சிலர் ராமச்சந்திரன், மார்க்சிஸ்ட் கவுன்சிலர் ஜெயக்குமார் மற்றும் சுயேச்சை கவுன்சிலர் முத்துலட்சுமி உள்ளிட்ட 8 கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து குடிநீர் வினியோகத்தில் பல்வேறு குழப்பங்கள் நிலவுவதாக கவுன்சிலர்கள் புகார் கூறினர். குறிப்பிட்ட ஒரு குடிநீர் வினியோக ஊழியர் குழப்பம் ஏற்படுத்துவதாக புகார் கூறப்பட்டது. எனவே உரிய மாற்றம் செய்ய ஏற்பாடு செய்வதாக தலைவர் மாதவன் உறுதி அளித்தார். பல்வேறு இடங்களில் தெரு விளக்குகள் எரியாமல் உள்ள நிலையில் அதனை பராமரிக்க தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு கடந்த கூட்டங்களில் வலியுறுத்தப்பட்டும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று புகார் கூறப்பட்டது.

துப்புரவு பணிகளை மேற்கொள்வதில் முறையான நடவடிக்கை எடுக்காததால் தனது வார்டு பகுதியில் கழிவுநீர் கால்வாய்களில் மண்மேவி கிடப்பதாக கவுன்சிலர் மதியழகன் புகார் தெரிவித்தார். மேலும் துப்புரவு பணிக்கான பேட்டரி வாகனங்கள் பழுதாகி உள்ளதாகவும், இதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கவுன்சிலர்கள் தெரிவித்தனர்.

போலீஸ் நிலையம்

விருதுநகர் கிழக்கு போலீஸ் நிலையம் அல்லம்பட்டி குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ளதால் பொதுமக்கள் புகார் கொடுக்க மிகவும் சிரமப்படும் நிலை உள்ளதால் கிழக்கு போலீஸ் நிலையத்திற்கு அருப்புக்கோட்டை முக்குரோடு அருகே ராமமூர்த்தி ரோட்டில் நகராட்சி இடத்தில் இடமளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கவுன்சிலர் ராஜ்குமார் வலியுறுத்தினார்.

இது குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக நகரசபை தலைவர் மாதவன் தெரிவித்தார். மேலும் பல்வேறு தீர்மானங்கள் விவாதத்திற்கு பின் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்