நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டு நீதிபதி ராமராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கோவை மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் கடந்த 2018-ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை விரைவில் விசாரிக்க நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டுக்கு கடந்த ஆண்டு ஜூலை மாதம் அனுப்பி வைக்கப்பட்டது. கோவையில் இருந்து மாற்றம் செய்யப்பட்டு 5 ஆண்டுகளுக்கு மேல் நிலுவையில் இருந்த 84 வழக்குகள், நாமக்கல் மாவட்டத்தில் தாக்கல் செய்யப்பட்ட 33 வழக்குகள் உள்பட 180 நுகர்வோர் வழக்குகளில் கடந்த 6 மாத காலத்தில் விசாரணை நடத்தப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளன.
கோவையில் இருந்து மாற்றம் செய்யப்பட்ட வழக்குகள் தினசரி மதியம் இணையதளம் மூலம் ஆன்லைனில் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. மாற்றம் செய்யப்பட்ட அனைத்து வழக்குகளிலும் தீர்வு காணப்பட்டு உள்ளதால் ஆன்லைன் மூலம் விசாரணை நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் வழங்கப்பட்டு இருந்த ஆன்லைன் விசாரணை முகவரி இனி இயங்காது. புதிதாக நுகர்வோர் வழக்குகளையும், தீர்ப்பை நிறைவேற்றும் மனுக்களையும், ஆன்லைன் மூலம், 'இ-பைலிங்' முறையில் தாக்கல் செய்யலாம்.
கடந்த 15-ந் தேதி முதல் நுகர்வோர் சிவில், கிரிமினல் உள்ளிட்ட அனைத்து வகையான வழக்குகளையும் சமரசம் செய்து கொள்வதற்கான புதிய சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. புதிய சட்டத்தின்படி தமிழகத்திலேயே முதல் முறையாக இன்று (செவ்வாய்க்கிழமை) 53 வழக்குகள், நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் சமரச நடவடிக்கைகளுக்காக பட்டியலிடப்பட்டு உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.