வங்கியில் மின்சாரம் இல்லாததால் வாடிக்கையாளர்கள் அவதி

வங்கியில் மின்சாரம் இல்லாததால் வாடிக்கையாளர்கள் அவதியடைந்துள்ளனர்.

Update: 2022-09-03 19:02 GMT

குன்னம்:

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள வேப்பூரில் ஒன்றிய அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. வேப்பூரின் மையப்பகுதியில் ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வாடிக்கையாளர்களாக உள்ளனர். இந்நிலையில் தினமும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் நகைக்கடன், விவசாய கடன் உள்ளிட்ட கடன் பெறுவதற்காகவும், தங்களது வங்கி கணக்கில் பணம் செலுத்துவதற்காகவும், தங்களுக்கு தேவையான பணத்தினை எடுப்பதற்காகவும் இந்த வங்கிக்கு வந்து செல்கின்றனர். பெரும்பாலான வாடிக்கையாளர்கள் வங்கிக்கு நேரடியாக வந்து தங்களது கணக்கில் இருந்து பணத்தை எடுப்பதையும், கணக்கில் பணத்தை செலுத்துவதையும் வழக்கமாகக் கொண்டு உள்ளனர். இந்நிலையில் 3 நாட்களுக்கு முன்பு வேப்பூர் பகுதியில் பெய்த கனமழையின்போது, அப்பகுதியில் மின்னல் தாக்கியது. அப்போது வங்கியின் அருகே இருந்த மின்மாற்றி பழுதானது. இதனால் வங்கிக்கு மின்சார வசதி தடைபட்டது. மேலும் வங்கியில் உள்ள கணினிகளும் பழுதடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் வங்கிப் பணிகள் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து 3 நாட்களாக வங்கியில் மின்சாரம் இல்லாததோடு, மாற்று ஏற்பாடு எதுவும் செய்யப்படாத நிலையில், வங்கி பணிகள் முடங்கி, பண பரிவர்த்தனை தடைபட்டது. இதனால் அவசர தேவைக்காக வங்கியில் பணம் எடுக்க வந்த வாடிக்கையாளர்கள் நீண்ட நேரம் காத்திருந்து திரும்பி சென்றனர். வேப்பூர் பகுதியில் விவசாய பணிகள் நடைபெற்று வரும் நிலையில் கூலி ஆட்களுக்கு பண கொடுக்க முடியாத சூழ்நிலை உள்ளது. இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறும் வாடிக்கையாளர்கள், பின்தங்கிய பகுதியில் இது போன்ற பிரச்சினைகள் ஏற்படாமல் வங்கி அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்