நாகையில், 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

நாகையில், 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. மீனவர்கள் நேற்று 5-வது நாளாக கடலுக்கு செல்லவில்லை.

Update: 2023-05-10 19:15 GMT

நாகையில், 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. மீனவர்கள் நேற்று 5-வது நாளாக கடலுக்கு செல்லவில்லை.

கோடை மழை

தமிழகத்தில் கோடை காலத்துக்கு முன்பாகவே வெயில் சுட்டெரிக்க தொடங்கி விட்டது. தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய காவிரி டெல்டா மாவட்டங்களில் சுட்டெரித்த வெயில் காரணமாக மக்கள் மழையை எதிர்பார்த்து காத்திருந்தனர்.

இந்த நிலையில் கடந்த 4-ந் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கியது. இதன் காரணமாக வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்குமோ என்ற அச்சத்தில் மக்கள் இருந்தனர். ஆனால் திடீரென ஏற்பட்ட வானிலை மாற்றம் காரணமாக டெல்டா பகுதிகளில் பரவலாக கோடை மழை பெய்தது. தொடர்ந்து சில நாட்கள் இரவு நேரங்களில் மழை பெய்ததால், கோடை வெப்பம் தணிந்தது.

1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

இதனிடையே தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, 5 கி.மீ. வேகத்தில் நகர்ந்து புயலாக வலுப்பெற வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. இந்த புயலுக்கு 'மோகா' என பெயரிடப்பட்டுள்ளது.

இதன் எதிரொலியாக நாகை துறைமுக அலுவலகத்தில் நேற்று 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு இருந்தது. புயல் உருவாகக்கூடிய வானிலை சூழல் மற்றும் பலமாக காற்று வீசும் என்பதை குறிக்கும் வகையில் இந்த 1-ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு இருப்பதாக துறைமுக அலுவலர்கள் தெரிவித்தனர்.

மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

மீன்பிடி தடைக்காலம் அமலில் இருப்பதால் நாகை மாவட்டத்தில் விசைப்படகு மீனவர்கள் தற்போது கடலுக்கு செல்லவில்லை. நாகை அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், நம்பியார் நகர், சாமந்தான்பேட்டை, வேதாரண்யம், கோடியக்கரை, புஷ்பவனம், ஆறுகாட்டுத்துறை உள்ளிட்ட 27 மீனவ கிராமங்களை சேர்ந்த பைபர் படகு எனப்படும் சிறிய வகை படகு மீனவர்கள் மட்டும் மீன்பிடித்து வருகிறார்கள்.

புயல் எச்சரிக்கை காரணமாக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அதிகாரிகள் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்து இருந்தனர். அதன்படி நாகை மாவட்ட பைபர் படகு மீனவர்கள் நேற்று 5-வது நாளாக மீன்பிடிக்க செல்லவில்லை. மீனவர்கள் தங்களுடைய பைபர் படகுகளை பாதுகாப்பான இடங்களில் நிறுத்தி வைத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்