'தினத்தந்தி' புகார் பெட்டி

'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2023-03-19 19:00 GMT

தெருவிளக்கு வசதி வேண்டும்

நிலக்கோட்டை தாலுகா மாலையகவுண்டன்பட்டி ஊராட்சி பொட்டிகுளம் கிராமத்தில் தெருவிளக்கு வசதி செய்யப்படவில்லை. இதனால் இரவில் வீட்டைவிட்டு வெளியே செல்லவே பெண்கள், குழந்தைகள் அச்சப்படுகின்றனர். மேலும் வாகன ஓட்டிகளும் அவதிப்படுகின்றனர். எனவே தெருவிளக்கு வசதியை ஏற்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கருப்பன், பொட்டிகுளம்.

ஆபத்தான மின்சார பெட்டி

பழனி-திண்டுக்கல் மெயின் ரோடு திருநகரில் உள்ள மின்கம்பத்தில் இருக்கும் மின்சார பெட்டி திறந்த நிலையில் பாதுகாப்பு இல்லாமல் உள்ளது. அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் மின்சார பெட்டி மீது எதிர்பாராதவிதமாக உரச நேர்ந்தால் மின் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மின்சார பெட்டியை சீரமைக்க வேண்டும்.

-பொதுமக்கள், பழனி.

தெருநாய்கள் தொல்லை 

தேனியை அடுத்த க.விலக்கு அரசு மருத்துவமனை வளாகத்தில் தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், பணியாளர்கள் என அனைவரையும் துரத்திச்சென்று அச்சுறுத்துகின்றன. இதனால் மருத்துவமனைக்கு வருபவர்கள் பீதியுடனே இருக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-முனியாண்டி, சின்ன ஓவுலாபுரம்.

இறைச்சி கழிவுகளால் துர்நாற்றம்

சின்னமனூரை அடுத்த எரசக்கநாயக்கனனூர் நாயக்கர் குளக்கரை பகுதியில் இறைச்சி கழிவுகளை மர்ம நபர்கள் கொட்டி செல்கின்றனர். இதனால் குளக்கரை குப்பை மேடாக காட்சியளிக்கிறது. மேலும் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரக்கேடும் ஏற்பட்டுள்ளது. எனவே இறைச்சி கழிவுகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ரவி, அப்பிப்பட்டி.

சேதமடைந்த சாலை 

திண்டுக்கல்-நத்தம் சாலையில் கன்னியாபுரம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட சாலை சேதமடைந்துள்ளது. இந்த சாலையை குண்டும், குழியுமாக மாறியதால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். மேலும் சாலை சேதமடைந்த இடத்தில் தடுப்பு வைக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-குமார், கன்னியாபுரம்.

பாலத்தின் தடுப்புச்சுவர் சேதம் 

பழனி அருகே மானூர் ஆற்றுப்பாலம் உள்ளது. இந்த பாலத்தின் தடுப்புச்சுவர் சேதமடைந்துள்ளது. இதனால் பாலத்தில் நடந்து செல்லும் பொதுமக்கள், வாகனங்களில் செல்பவர்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். மேலும் இரவில் விபத்துகளும் அடிக்கடி நடக்கிறது. எனவே சேதமடைந்த பாலத்தின் தடுப்புச்சுவரை சீரமைக்க வேண்டும்.

-அறிவாசான், மானூர்.

பராமரிப்பு இல்லாத சுகாதார நிலைய கட்டிடம் 

சாணாாபட்டி ஒன்றியம் சிலுவத்தூர் ஊராட்சி அதிகாரிபட்டியில் துணை சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த துணை சுகாதார நிலையத்துக்கான கட்டிடம் பராமரிப்பு இல்லாததால் சிதலமடைந்து வருகிறது. கட்டிடத்தின் முன்பு செடி-கொடிகள் வளர்ந்து புதர் மண்டி காட்சியளிக்கிறது. இதனால் துணை சுகாதார நிலையத்துக்கு சிகிச்சைக்காக வருபவர்கள் அச்சத்துடனே வரவேண்டிய நிலை உள்ளது. எனவே கட்டிடத்தை சீரமைக்க வேண்டும்.

-ஜான்கென்னடி, சாணார்பட்டி.

குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

போடி ஒன்றியம் அணைக்கரைப்பட்டி கிராமத்தில் பதிக்கப்பட்ட குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக சாலையில் செல்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் போதுமான அளவு குடிநீர் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். எனவே குழாய் உடைப்பை உடனே சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-லட்சுமணன், அணைக்கரைப்பட்டி.

போக்குவரத்து நெரிசல் 

கம்பம் எல்.எப். பிரதான சாலையில் பகலில் செல்ல சரக்கு வாகனங்களை அனுமதி கொடுப்பதால் கம்பம் காந்தி சிலை பகுதியில் இருந்து கம்பம்மெட்டு பிரிவு வரை அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே பகலில் சரக்கு வாகனங்களை அந்த சாலையில் செல்ல அனுமதிக்காமல் மாற்றுப்பாதையில் திருப்பி விட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கிஷோர், கம்பம்.

----------------

உங்கள் புகார்களை இணையதளம் மூலமாகவும் https://pukaarpetti.dailythanthi.com என்ற முகவரியில் பதிவு செய்யலாம்.

----------------

Tags:    

மேலும் செய்திகள்