நெகமம்
நெகமம், கிணத்துக்கடவு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கிணற்று பாசனம் மூலம் வாழை சாகுபடி பரவலாக மேற்கொள்ளப்படுகிறது. தற்போது பிளாஸ்டிக்குக்கு மாற்றாக பயன்படுத்துவதால், வாழை இலை நுகர்வு அதிகரித்துள்ளது. இதை கருத்தில் கொண்டு இலை உற்பத்திக்கு ஏற்ற வாழை ரகங்களை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.
ஆனால் இந்த சீசனில் காற்று வீசும் காலம் காலதாமதமாக தொடங்கியுள்ளது. இது வாழை இலை உற்பத்தியில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. அதிக வேகத்தில் வீசும் சூறாவளி காற்று காரணமாக இலைகள் கிழிந்து வருகிறது. இதனால் இலைகளை அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் கவலை அடைந்து வருகின்றனர். சில நேரங்களில் வாழை மரங்களே சாய்ந்து விடுகின்றன. இதனால் நஷ்டம் ஏற்படும் நிலை உள்ளது. எனவே வாழை சாகுபடிக்கு காப்பீடு செய்யவும், பாதிப்புக்கு நிவாரணம் கிடைக்கவும் அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.