கலைத்திருவிழா போட்டிகள் நிறைவு

உடுமலையில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வட்டார அளவில் நடந்து வந்த கலைத்திருவிழா போட்டிகள் நிறைவடைந்தது. இதில் 1,800 மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.

Update: 2022-12-02 18:32 GMT


உடுமலையில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வட்டார அளவில் நடந்து வந்த கலைத்திருவிழா போட்டிகள் நிறைவடைந்தது. இதில் 1,800 மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.

கலைத்திருவிழா

தமிழகத்தில் பள்ளி கல்வித்துறையின் அறிவுரைப்படி, பள்ளி மாணவ, மாணவிகளின் கலைத்திறனை வெளிக்கொண்டுவரும் வகையில் அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு கலைகள் சார்ந்த கலைத்திருவிழா போட்டிகள் அந்தந்த பள்ளிகள் அளவில் கடந்த வாரம் நடந்தது. இந்த போட்டிகள் ஒவ்வொன்றிலும் முதலிடம் பெற்றுள்ள மாணவ, மாணவிகள் வட்டார அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள தகுதி பெற்றனர். அதன்படி உடுமலை வட்டார அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் உடுமலை தளிசாலையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 4 நாட்கள் நடந்தது. இதில் இசை, நாடகம், பேச்சு, கட்டுரை, ஓவியம், நடனம் உள்ளிட்ட 34 வகையான கலை, இலக்கிய போட்டிகள் நடந்தது.

போட்டிகள் 6 முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகள், 9 மற்றும் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகள், 11 மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகள் என 3 பிரிவுகளாக நடந்தது. இறுதி நாளான நேற்று 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு நாடகம், நடனம், இசைக்கருவிகளை வாசித்தல் மற்றும் வாய்ப்பாட்டு இசை உள்ளிட்ட போட்டிகள் உடுமலை வட்டார கல்வி அலுவலர்கள் மனோகரன், ஆறுமுகம், சரவணக்குமார், வட்டார வள மைய மேற்பார்வையாளர் சண்முகம் ஆகியோர் முன்னிலையில் நடந்தது. ஒருங்கிணைப்புக்குழு ஆசிரியர் கு.கண்ணபிரான் நன்றி கூறினார்.

1,800 மாணவ-மாணவிகள்

4 நாட்கள் நடந்த போட்டிகளில் 1,800-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப்பெற்ற மாணவ-மாணவிகள் மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்துகொள்ள தகுதிபெற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்