ராமநாதபுரம் மன்னர் குமரன் சேதுபதி மரணம்

ராமநாதபுரம் மன்னர் குமரன் சேதுபதி மரணம்;

Update:2022-05-24 22:35 IST

ராமநாதபுரம்

மதுரை தமிழ் சங்கத்தின் தலைவராக இருந்து வந்த ராமநாதபுரம் மன்னர் குமரன் சேதுபதி நேற்று மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 57.

இவர் ராமநாதபுரம் சமஸ்தானத்தின் கடைசி ஜமீன்தாரும், தமிழக பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த சண்முகராஜேசுவர சேதுபதியின் பேரனும், டாக்டர் நாகேந்திர சேதுபதியின் மகனும் ஆவார்.

குமரன் சேதுபதி ராமேசுவரம் கோவில் தக்காராக கடந்த 25 ஆண்டுகளாக பொறுப்பு வகித்து வந்தார். உலகத்தமிழ் சங்கத்தின் பொதுக்குழு உறுப்பினராகவும் இருந்துள்ளார். சேதுபதிகளின் வாரிசான இவர், தமிழுக்கு ஆற்றிய தொண்டுக்காக தமிழக அரசின் முதல் தமிழ்த்தாய் விருதை கடந்த 2012-ல் பெற்றார்.

ராமநாதபுரம் ராஜா மேல்நிலைப்பள்ளியின் செயலாளராக கடந்த 2006-ம் ஆண்டு முதல் இருந்து வந்தார். தஞ்சை தமிழ் பல்கலைக்கழக செனட் உறுப்பினர், ராமநாதபுரம் மாவட்ட கால்பந்து சங்கத்தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளையும் வகித்தார். இவருக்கு ராணி லட்சுமி நாச்சியார் என்ற மனைவியும், நாகேந்திரசேதுபதி என்ற மகனும், மகாலட்சுமி நாச்சியார் என்ற மகளும் உள்ளனர்.

குமரன்சேதுபதி மறைவையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பிரமுகர்களும்,, ஜமீன் பரம்பரையினரும், அரசியல் கட்சியினரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். மன்னர் என்.குமரன் சேதுபதி உடலுக்கு அரசின் சார்பில் ராமநாதபுரம் கலெக்டர் சங்கர்லால் குமாவத் நேரில் வந்து மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மேலும் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தினர். இறுதிச்சடங்கு இன்று (புதன்கிழமை) மாலை 3 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்