விவசாயிக்கு கொலை மிரட்டல்; டாக்டர் உள்பட 2 பேர் மீது வழக்கு

மேட்டுப்பாளையத்தில் பசுமாடுகள் மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, விவசாயிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக டாக்டர் உள்பட 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Update: 2022-09-25 18:45 GMT

மேட்டுப்பாளையம், 

மேட்டுப்பாளையத்தில் பசுமாடுகள் மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, விவசாயிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக டாக்டர் உள்பட 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

ஆசிட் வீச்சு

மேட்டுப்பாளையம் அடுத்த கல்லார் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் (வயது 56). விவசாயி. இவர் கடந்த மாதம் 17- தேதி தனது பசு மாடுகளை மேய்ச்சலுக்காக விட்டிருந்தார். அப்போது பசு மாடுகள் மீது மர்ம ஆசாமிகள் ஆசிட் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் பசு மாடுகள் உடலில் தோலின் மேல் பகுதி முழுவதும் வெந்து இருந்தது. மேலும் ஆசிட் வீச்சின் தாக்கத்தால் காயமடைந்த பசுமாடுகள் அவதிப்பட்டு வந்தன.

இதுகுறித்து பாலசுப்பிரமணியம் மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் கடந்த 22-ந் தேதி பாலசுப்பிரமணியம் மேட்டுப்பாளையம்-ஊட்டி மெயின் ரோட்டில் ஓடந்துறை ஊராட்சி சார்பில் கட்டப்பட்டு வரும் வடிகால் பணிகளை பார்த்து கொண்டிருந்தார்.

2 பேர் மீது வழக்கு

அப்போது அங்கு வந்த மேட்டுப்பாளையம் பங்களாமேடு பகுதியை சேர்ந்த சித்த மருத்துவர் ரவிச்சந்திரன் (51), அவரது மகன் சேதுபதி (35) ஆகியோர் முன்விரோதம் காரணமாக பாலசுப்பிரமணியத்தை தகாத வார்த்தையால் திட்டி கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து சென்றனர். இதுகுறித்து பாலசுப்பிரமணியம் மேட்டுப்பாளையம் போலீசில் புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில் போலீசார் ரவிச்சந்திரன், சேதுபதி ஆகிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்