சென்னை மெட்ரோ ரெயில் பணிகளுக்காக பனகல் பூங்காவில் 150 மரங்கள் வெட்ட முடிவு - அதிகாரிகள் தகவல்

சென்னை மெட்ரோ ரெயில் பணிகளுக்காக பனகல் பூங்காவில் உள்ள 150 மரங்கள் வெட்ட முடிவு செய்யப்பட்டு உள்ளது என்று சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Update: 2022-07-12 15:22 GMT

சென்னை, தியாகராயநகரில் உள்ள பனகல் பூங்காவில் வெட்டப்பட்ட மரங்கள்

சென்னை:

சென்னையில் 3 பாதைகளில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளுக்கு தேவைப்படும் இடங்கள் கையகப்படுத்தப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

முதலாவது கட்ட பணியின் போதுஷெனாய் நகரில் உள்ள திரு.வி.க. பூங்காவில் கீழ் சுரங்க ரெயில் நிலையம் அமைக்கப்பட்டது. ரெயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில் பணிகள் நடந்த திரு.வி.க. பூங்காவில் பணியின் போது சேதப்படுத்தப்பட்ட பகுதிகள் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக இந்த பூங்கா திறக்கப்பட உள்ளது.

இதேபோன்று 2-ம் கட்டப்பணியின் போது 4-வது வழித்தடம் அமைப்பதற்காக தியாகராயநகரில் வணிக வளாகங்கள் அருகில் 8.8 ஏக்கர் பரப்பளவில் பசுமையான இடமாக உள்ள பனகல் பூங்காவின் ஒரு பகுதியை சென்னை மெட்ரோ ரெயில் நிலையம் கையகப்படுத்தி பணிகளை நிறைவேற்றி வருகிறது. இதனால் தினசரி காலையில் முறையான நடை பயிற்சி, சிறுவர்கள் விளையாட்டுகளில் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:-

மெட்ரோ ரெயில் பணிகளுக்காக மரங்களை வெட்டாமல் முற்றிலும் தவிர்க்க முடியாது. ஆனால் வெட்டப்படும் மரங்களின் எண்ணிக்கையை குறைக்க முயற்சிக்கிறோம். பணிகள் நிறைவடைந்த பின்னர் பூங்கா புதுப்பிக்கப்பட்டு, பழைய நிலைக்கு கொண்டு வரப்படும். பனகல் பூங்காவில் 650 மரங்கள் உள்ளன. அவற்றில், 150 மரங்கள் கட்டுமானப் பகுதியில் இருப்பது கண்டறியப்பட்டு வெட்டப்பட்டு உள்ளது.

மேலும் 29 மரங்கள் இடமாற்றம் செய்யப்படுகிறது. அசோகா மரம், பூவரசம் மரம் ஆகிய 2 மரங்கள் வெட்டாமல் அங்கேயே தக்கவைக்கப்படுகிறது. மீதமுள்ளவை கோடரியை எதிர்கொள்ளும்.

பூங்காவில் சுமார் 3 ஆயிரத்து 300 சதுர மீட்டர் பரப்பளவு கட்டுமானத்திற்காக கையகப்படுத்தப்பட்டுள்ளது, அதில் 350 சதுர மீட்டர் நிரந்தரமாக கையகப்படுத்தப்படும். பனகல் பூங்கா நிலையத்தின் நுழைவு மற்றும் வெளியேறும் இடங்கள் பூங்காவில் கட்டப்படலாம் என அதிகாரிகள் கூறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்