காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்;
தேவகோட்டை
ராகுல் காந்தி எம்.பி. பதவி நீக்கத்தை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு மூத்த தலைவர் கே.ஆர். ராமசாமி தலைமையில் தேவகோட்டை தியாகிகள் பூங்கா அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் சத்தியமூர்த்தி முன்னிலை வகித்தார். காரைக்குடி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுந்தரம், மாநில செயற்குழு உறுப்பினர்கள் ஜெயசிம்மன், வேலுச்சாமி மாவட்ட பொருளாளர் பழனியப்பன் உள்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் மூத்த தலைவர் ராமசாமி பேசியதாவது:- குறிப்பிட்ட நாட்களில் அதானி சொத்து எப்படி இவ்வளவு வந்தது. பிரதமர் மோடி வெளிநாடு சென்றபோதெல்லாம் இருவரும் ஒன்றாக செல்கின்றனர் என்றுதான் ராகுல்காந்தி கேட்டார். இதற்காக ராகுல் காந்தியை கைது செய்ய வேண்டுமா? காங்கிரஸ் கட்சி மதசார்பற்ற கொள்கையை முன் நிறுத்தி அரசியல் செய்கிறது. பா.ஜ.க மதத்தை வைத்து மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்துகிறது. வருகிற கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். அதே போல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி கூட்டணிதான் வெற்றி பெறும். இந்திய ஒற்றுமையை வலியுறுத்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொண்டார். ராகுலின் செல்வாக்கை கண்டு பா.ஜ.க அவரது பதவி மீது கை வைத்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார். ஆர்ப்பாட்டத்திற்கான ஏற்பாடுகளை நகர தலைவர் லோகநாதன், வட்டார தலைவர்கள் (தெற்கு) சிறுநல்லூர் பிரபாகரன், (வடக்கு) பூங்குடி வெங்கடாசலம், கன்னங்குடி வட்டார தலைவர் ராஜ்மோகன் ஆகியோர் செய்து இருந்தனர்.