கோவை மாவட்டத்தில் 3 இடங்களில் ஆர்ப்பாட்டம்

அ.தி.மு.க.சார்பில் மின்கட்டணம், சொத்துவரி, விலை வாசி உயர்வை கண்டித்து வருகிற 25-ந்தேதி கோவை மாவட்டத்தில் 3 இடங்களில் நடைபெறும் என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வேண்டுகோள் விடுத்தார்.;

Update:2022-07-21 20:32 IST


அ.தி.மு.க.சார்பில் மின்கட்டணம், சொத்துவரி, விலை வாசி உயர்வை கண்டித்து வருகிற 25-ந்தேதி கோவை மாவட்டத்தில் 3 இடங்களில் நடைபெறும்  என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வேண்டுகோள் விடுத்தார்.

ஆலோசனை கூட்டம்

மின்கட்டணம், சொத்துவரி, விலைவாசி உயர்வை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் கோவை மாவட்டத்தில் 3 இடங்களில் வருகிற 25-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இது தொடர்பாக அ.தி.மு.க. கோவை மாநகர், புறநகர் வடக்கு, புறநகர் தெற்கு ஆகிய மாவட்டங்களின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கோவையில் உள்ள இதயதெய்வம் மாளிகையில் நடந்தது.

எம்.எல்.ஏ.க்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், அம்மன் அர்ச்சுனன், செ.தாமோதரன், வி.பி.கந்தசாமி, ஏ.கே.செல்வராஜ், அமுல்கந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், கட்சியின் தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

திரளானவர்கள் பங்கேற்க வேண்டும்

மின்கட்டணம், சொத்துவரி உயர்த்தப்பட்டதால் பலர் பாதிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. தி.மு.க. ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீரழிந்துவிட்டது.

நாம் ஆட்சியில் இருந்தபோது கோவைக்கு பல திட்டங்களை கொண்டு வந்து பணிகளை தொடங்கினோம். அந்த பணிகளை கூட தி.மு.க. அரசு செய்து முடிக்கவில்லை. சாலைகள் அனைத்தும் சேதமடைந்து காணப்படுகிறது.

எனவே இதை கண்டித்து வருகிற 25-ந் தேதி நாம் நடத்தும் ஆர்ப்பாட்டம் மிகவும் எழுச்சியாக இருக்க வேண்டும்.

ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்க வேண்டும். இந்த ஆர்ப்பாட்டம் சென்னை ஜார்ஜ் கோட்டையையே உலுக்கும் அளவுக்கு இருக்க வேண்டும்.

இந்த ஆர்ப்பாட்டம் கோவை மாவட்டத்தில், கோவை, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி ஆகிய 3 இடங்களில் நடக்கிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏற்படும் எழுச்சி, நாடாளுமன்றத்தில் 40-க்கு 40 இடங்களை பெறும் வகையிலும், மீண்டும் எடப்பாடி பழனிச்சாமியை தமிழக முதல்-அமைச்சராக ஆக்கும் வகையிலும் இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

எடப்பாடி பழனிச்சாமிக்கு நன்றி

கூட்டத்தில், முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்த செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் நன்றி தெரிவிப்பது, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை தலைமை நிலைய செயலாளராக நியமித்த இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவிப்பது,

கோவை மாவட்டத்தில் வருகிற 25-ந் தேதி நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்பது,

ஜனாதிபதி தேர்தலில் திரவுபதி வெற்றிக்கு அ.தி.மு.க. சார்பில் வாக்களித்த பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் எம்.எல்.ஏ.க்கள் ராஜ்ய சபா எம்.பி.களுக்கு நன்றி தெரிவிப்பது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

மேலும் செய்திகள்