தேவிபட்டினம் நவபாஷாண நவக்கிரக கடலில் புனித நீராடிய பக்தர்கள்
தை அமாவாசையை முன்னிட்டு தேவிபட்டினம் நவபாஷாண கடல் மற்றும் சேதுக்கரை கடலிலும் பக்தர்கள் புனித நீராடினர்.;
தேவிபட்டினம்,
தை அமாவாசையை முன்னிட்டு தேவிபட்டினம் நவபாஷாண கடல் மற்றும் சேதுக்கரை கடலிலும் பக்தர்கள் புனித நீராடினர்.
நவபாஷாண நவக்கிரக கோவில்
தை அமாவாசையை முன்னிட்டு நேற்று தமிழகம் முழுவதும் உள்ள நீர் நிலைகளில் பக்தர்கள் புனித நீராடி இறந்து போன தங்களது முன்னோர்களின் ஆத்மா சாந்தி அடைய வேண்டிய திதி, தர்ப்பணம் பூஜை செய்து வழிபட்டனர்.
இந்த நிலையில் தை அமாவாசையை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் தேவி பட்டினத்தில் உள்ள நவபாஷாண நவக்கிரக கோவிலில் உள்ள நவபாஷாண கடலில் புனித நீராட நேற்று அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். நேற்று அதிகாலை முதல் மாலை வரையிலும் சுமார் 10 ஆயிரத்துக்கும் அதிகமான பக்தர்கள் நவக்கிரக கடலில் புனித நீராடி நவக்கிரக கற்களை 9 முறை சுற்றி வந்து தங்களது முன்னோர்களின் ஆத்மா சாந்தி அடைய வேண்டி திதி தர்ப்பண பூஜை செய்து வழிபட்டனர்.
பக்தர்கள் குவிந்தனர்
ஏராளமான பக்தர்கள் நவக்கிரக கடலில் குவிந்திருந்ததால் சிவகங்கை மண்டல இணை ஆணையர் பழனிகுமார் உத்தரவின் பேரில் ராமநாதபுரம் உதவி ஆணையர் ஞானசேகரன், நவபாஷாண நவக்கிரக கோவில் செயல் அலுவலர் நாராயணி, எழுத்தர் தங்கவேல் பாண்டியன் உள்ளிட்ட ஏராளமான திருக்கோவில் பணியாளர்கள் பக்தர்களை வரிசையாக ஒழுங்குபடுத்தி நவக்கிரக கடலில் புனித நீராடுவதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். கடந்தாண்டு தை அமாவாசையை விட இந்த ஆண்டு தை அமாவாசை நாளில் தேவிபட்டினம் நவபாஷாண கடலில் புனித நீராட பக்தர்கள் கூட்டம் அதிகமாகவே இருந்ததாக கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதேபோல் திருப்புல்லாணி அருகே உள்ள சேதுக்கரை கடலிலும் தை அமாவாசையை முன்னிட்டு நேற்று புனித நீராட ஏராளமான பக்தர்கள் குவிந்திருந்தனர். கடலில் புனித நீராடிய பக்தர்கள் கடற்கரையில் அமர்ந்து புரோகிதர்கள் மூலம் இறந்து போன தங்களது முன்னோர்களின் ஆத்மா சாந்தி அடைய வேண்டி திதி, தர்ப்பண பூஜை செய்தும் வழிபட்டனர்.