கத்தி போட்டபடி ஊர்வலமாக சென்ற பக்தர்கள்

நவராத்திரி விழாவையொட்டி ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் பக்தர்கள் கத்திபோட்டபடி ஊர்வலமாக சென்றனர்.

Update: 2023-10-24 18:45 GMT
கோவை


நவராத்திரி விழாவையொட்டி ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் பக்தர்கள் கத்திபோட்டபடி ஊர்வலமாக சென்றனர்.


நவராத்திரி விழா


கோவை ரங்கேகவுடர் வீதியில் ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் நவராத்திரி விழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் நவராத்திரி விழா தொடங்கியது.


நவராத்திரி உற்சவ நிறைவு நாள் விழா நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி தேவாங்க சமூகத்தை சேர்ந்த இளைஞர்கள் கத்திபோட்டு ராமலிங்கசவுடேஸ்வரி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.


பக்தி பரவசம்


அதன்படி அவர்கள் ஆர்.எஸ்.புரம் ராமச்சந்திரா சாலையில் உள்ள விநாயகர் கோவில் முன்பு குவிந்தனர். பின்னர் அவர்கள் கத்தி போட்டபடி ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர். உடலில் கத்தி போட்டதால் பக்தர்கள் ரத்தம் சொட்ட, சொட்ட சென்றனர்.


அப்போது அவர்கள் வேசுக்கோ... தீசுக்கோ என்று பாடிக் கொண்டும், நடனம் ஆடியபடியும் பக்தி பரவசத்துடன் சென்று அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.


திருமஞ்சன பொடி


கத்தி போட்டதால் பக்தர்களின் உடலில் ரத்தம் வழிந்தது. அப்போது உடன் சென்றவர்கள், காயம்பட்ட இடத்தில் திருமஞ்சன பொடியை வைத்தனர். இதனால் கத்தி போட்ட இடத்தில் ஏற்பட்ட காயம் விரைவில் குணமடைந்து விடும். மேலும் கத்தி போட்டு அம்மனுக்கு வேண்டுதல் செய்தால் நினைத்த காரியம் கைகூடி வரும் என்பதும் ஐதீகம்.


பக்தர்கள் ஊர்வலமாக அம்மன் கோவிலை வந்தடைந்தும் சிறப்பு பூஜை நடைபெற்றது. அதில் பக்தர்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர். அதைத்தொடர்ந்து அம்மனுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.


இதில் ஏராளமான பெண்கள் மற்றும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


மற்றொரு கோவில்


அதுபோன்று மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள மற்றொரு கோவிலில் இருந்து ராஜவீதியில் உள்ள ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலுக்கு பக்தர்கள் கத்திபோட்டபடி ஊர்வலமாக வந்தனர். நீளமான கத்தியை இருகைகளிலும் ஏந்திய பக்தர்கள் தங்களின் உடலில் கீறியதால் ரத்தம் சொட்ட சொட்ட ஊர்வலமாக சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது.


Tags:    

மேலும் செய்திகள்